Tuesday, December 04, 2007

Star6a. மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே! ((மீள்பதிவு)

திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட தோற்றத்தோடு இன்றும் மாறாமல் காட்சியளிக்கிறது! நான் படித்த காலகட்டத்தில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர் சேர்ந்து 'சாரதி செஸ் கிளப்' என்ற அமைப்பை நடத்தி வந்தனர். ஒருவர் அக்கிளப்பில் உறுப்பினராக ஆவது சற்று கடினமே! கிளப்பின் மூத்த உறுப்பினர்கள், சேர விரும்புபவரின் செஸ் அறிவை சோதித்துப் பார்த்து திருப்தி அடைந்தால் மட்டுமே அவர் உறுப்பினராக முடியும். சாரதி செஸ் கிளப் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவருக்கு பரிசுகளும் வழங்கி வந்தது. அந்த கிளப்பில் உறுப்பினர் ஆனதில் அப்போது எனக்கு ரொம்பப் பெருமை.

சாரதி செஸ் கிளப்பில் ஜாம்பவான்களாகக் கருதப்பட்டவர்கள், அதன் தலைவரான, 'சார்' என்றழைக்கப்பட்ட, எம்.காம். படிப்பில் தங்க மெடல் வாங்கிய ராகவன், கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து வந்த வேணு (அதிபுத்திசாலி, ஆனால் கொஞ்சம் கர்வி), சென்னைப் பல்கலைக்கழக சேம்பியன் ரமணி மற்றும் சதுரங்க விளையாட்டை உயிர் மூச்சாகவும், பா·பி ·விஷரை ஆதர்ச நாயகனாகவும் பாவித்து வந்த 'செஸ்'வரதராஜன் ஆகியோர். தினமும் மாலை நேரங்களில் சார் வீட்டுத் திண்ணையில் செஸ் ஆட்டங்கள் நடைபெறும். எல்லாமே செஸ் விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற சீரியஸான ஆட்டங்கள். அதோடு உலகின் சிறந்த ஆட்டக்காரர்களின் ஆட்டங்கள் பற்றிய விவாதங்களும் உண்டு. அப்போது தான், என் வாழ்வில் மறக்க முடியாத அந்த சம்பவம் நடைபெற்றது!

அந்த கார்கால மாலைப் பொழுதில் வானம் இருண்டு, மிக லேசான தூறலுடன் மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. வழக்கம் போல நாங்கள் செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வீதியில் குப்பை பொறுக்கும் ஒரு தாடிக்கார இளைஞர், தோளில் கோணியோடு, வாசலில் நின்றபடி சன்னல் கம்பி வழியாக நாங்கள் ஆடுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

சார் அவரைப் பார்த்து, "செஸ் ரொம்பப் பிடிக்குமா? விளையாடத் தெரியுமா?" என ஒரு பேச்சுக்கு கேட்டார். அவ்விளைஞர், " சுமார ஆடுவேங்க! என்னையும் சேத்துப்பீங்களா?" என்று பணிவாகக் கேட்டார். சார் என்ன நினைத்தாரோ, அவ்விளைஞரைப் பார்த்து, "கோணியை ஒரமாக வச்சுட்டு வாங்க. இவரோடு ஒரு ஆட்டம் ஆடலாம்" என்று வேணுவை சுட்டிக் காட்டி கூறினார். வேணு, "சார், நான் ஆடத்தான் வேண்டுமா?" என்று அயற்சியாக வினவ, சார், "பாவம், ஆசைப்படறார். ஒரு வாய்ப்பு தரலாமே" என்று குழுவின் தலைவர் என்ற முறையில் தனது முடிவைச் சொன்னவுடன் ஆட்டம் தொடங்கியது.

வேணு எங்களிடம் செய்வது போலவே, தனக்கு வெள்ளைக் காய்கள் என்று தானே நிர்ணயித்துக் கொண்டு, காய்களை செஸ் போர்டில் வரிசைப்படுத்தினார். இந்த மட்டும் ஆட வாய்ப்பு தந்தார்களே என்று
தாடிக்காரரும், அதற்கு ஆட்சேபிக்காமல், கறுப்புக் காய்களைஏற்றுக் கொண்டார்! வேணுவின் முதல் நகர்த்தல் P-K4. தாடியும் P-K4! அடுத்து, வேணுவின் P-KB4 என்ற மூவ், 'King's Gambit'க்கு தாடிக்காரருக்கு அழைப்பு விடுத்தது. வேணு, 'King's Gambit'-ஐ தொடர்ந்து ஆட்டம் செல்லக் கூடிய பலவித சாத்தியங்களிலும் விற்பன்னன் என்பதால், தாடி அந்த 'அழைப்பை' ஏற்பாரா, நிராகரிப்பாரா என்று எங்களிடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தாடி, PK4 X PKB5 என்று வேணுவின் சிப்பாயை வெட்டி வீழ்த்தி 'King's Gambit'க்கான அழைப்பை ஏற்றவுடன், 'தாடி கோணிக்குள் ஏதாவது செஸ் புத்தகம் வைத்திருக்கிறதோ' என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது! முதலில் கேஷ¤வலாகவும், வேகமாகவும் ஆட ஆரம்பித்த வேணு பத்து நகர்த்தல்களுக்கு பிறகு, எதிராளியின் சரியான பதில் மூவ்களைக் கண்டவுடன், யோசித்து ஆட ஆரம்பித்தார். வேணுவும் தாடியும் எதிர்மறையாக 'castle' செய்தவுடன், செஸ் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தூறல் வலுத்து, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. வேணு ஒரு யானையையும், ஒரு விதூஷகரையும், ஒரு சிப்பாயையும் இழந்து தாடியின் ராணியை வீழ்த்தியிருந்தார். தாடி அசரவில்லை!

இருவருமே அடுத்தவரின் பாதுகாப்பு அரணை உடைக்கத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேணுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு செஸ் போர்டையே உற்றுப் பார்த்தபடி இருந்தார். குப்பை இளைஞரின் முகத்திலோ எந்தவொரு ரியாக்ஷனும் இல்லை. இந்த வினோதமான விளையாட்டைக் காண கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில், வேணுவிடம் ராணி, ஒரு விதூஷகர், ஒரு குதிரை மற்றும் மூன்று சிப்பாய்களும், தாடியிடம், இரண்டு யானைகளும், இரண்டு குதிரைகளும், நான்கு சிப்பாய்களும் இருந்தன.

வேணு திடீரென்று, "யாரும் ஜெயிக்க முடியாது போலிருக்கு! டிரான்னு வச்சிக்கலாம்" என்றதற்கு அவ்விளைஞர், "இல்லீங்க, இன்னும் ஆட்டம் பாக்கி இருக்குதுங்க" என்றார். பயங்கரக் கடுப்பான வேணு, ஆட்டக்களத்தில், ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கினார். அப்போது வானம் மடை திறந்தது போல, பேரிரைச்சலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. வேணுவின் தாக்குதலை திறமையாக சமாளித்த தாடி இளைஞர், தன் ராஜாவை பத்திரப்படுத்தி விட்டு, வேணுவிடமிருந்து மேலும் இரண்டு சிப்பாய்களை வீழ்த்தி விட்டார்.

ஒரு தேர்ந்த 'முடிவாட்ட' (END GAME) விற்பன்னரின் லாவகத்துடன் காய்களை நகர்த்தி, தாடிக்காரர் வேணுவின் ராஜாவை சந்திக்கு இழுத்தார். 'தொடர் செக்' (Perpetual Check) வழியிலாவது தப்பித்து டிரா செய்து விடலாம் என்ற நம்பிக்கையால் (தாடிக்கு எதிராக 'ரிஸைன்' செய்வதை வேணு அவமானமாக எண்ணியிருக்கலாம் என்பது என் யூகம்!) ,வேணு தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், தாடிக்காரர் வேணுவை நோக்கி, "செக் மேட்! ஆனால் நீங்க ரொம்ப நல்லா ஆடறீங்கய்யா. நன்றிங்க." என்று கூறி விட்டு தன் கோணிப்பையை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல், விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார். சரியாக மழையும் நின்று, தெருவில் மழை நீர் வெள்ளமாகத் திரண்டிருந்தது. அவ்விடத்தில் ஒரு அபரிமிதமான அமைதியும் நிலவியது!

நடந்த சம்பவத்தின் அபாரத் தன்மையையும், அசாதாரணத்தையும் உணர அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் சற்று நேரம் பிடித்தது. நான் தாடிக்காரர் சென்ற வழியில் ஓடி, அவரை இடைமறித்து, "ஒங்க பேர் என்னன்னு சொல்லலியே?" என்று வினவியதற்கு, அவர், "அரசன்னு தெரிஞ்சவங்க கூப்பிடுவாங்க, தம்பி" என்று சொல்லி விட்டு போய் விட்டார். அன்றிலிருந்து செஸ் விளையாட வேணு வரவில்லை! வேணுவின் மெல்லிய அகந்தையை, அந்த தாடிக்கார அறிவாளி பொட்டலம் கட்டி தன் கோணியில் எடுத்துச் சென்றதாகவே எனக்குத் தோன்றியது.

மெல்ல மெல்ல திண்ணை செஸ் ஆட்டங்களும் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போயின. சார், மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர் அங்கேயே செட்டில் ஆகி விட்டதாகக் கேள்வி. வேணு பொறியியல் படிப்பு முடிந்து, IIM, பெங்களூரில் மேலாண்மை படிப்புக்குப் பிறகு, பணி நிமித்தம் மும்பை சென்று விட்டார். அதன் பின் தொடர்பு இல்லை. திருவல்லிக்கேணி வீட்டை காலி செய்து போன ரமணி, தேசிய அளவில் செஸ் விளையாடியதாக, பின்னாளில் அவர் நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். எனக்கும் செஸ்ஸ¤க்கும் ஆன தொடர்பு, ஆங்கில தினசரிகளில் இடம்பெறும் செஸ் புதிர்களை ஆராய்வதோடு நின்று போனது!
*******************************************

நாலைந்து வருடங்களுக்கு முன், மும்பையில் எனக்குப் பழக்கமான நண்பர் ஒருவர் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்க மதுரைக்குச் சற்று தொலைவில் அமைந்துள்ள விஸ்வநாதபெரி என்ற கிராமத்துக்கு, சில நண்பர்களுடன் சென்றிருந்தேன். நண்பரின் தந்தையார் பண்னையார் என்பதும், அவருக்கு கிட்டத்தட்ட 200 ஏக்கர் விளைநிலம் இருப்பதும், அங்கு சென்ற பிறகே எங்களுக்கு தெரிய வந்தது. பெரிய பண்ணை வீட்டில் ராஜ உபசாரம், காலாற நடந்து நண்பரது நிலங்களையும், தோட்டங்களையும் சுற்றிப் பார்ப்பது, முதல் கள்ளு, முதல் டிராக்டர் பயணம், பிரிட்ஜ் ஆட்டம், ஒரு சர்க்கரை ஆலைக்கு விசிட், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த சாஸ்தா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா என்று ஒரு மூன்று நாட்கள் அமர்க்களமாக கழிந்தன!

நண்பருக்கு விடை கொடுத்து, கிராமத்திலிருந்து மதுரை வந்து, சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன், போக்குவரத்து நெரிசலால், பேருந்து நின்று விட்டது. எப்போதும் போல் நான் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். சாலையோரத்துக் கடை ஒன்றில் வெள்ளை வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து, தங்க பிரேம் மூக்குக்கண்ணாடி போட்டிருந்த நடுத்தர வயதுக்காரர் கடையில் வேலை செய்யும் சின்னப்பையனை பார்த்து, "பழைய புக்கா இருந்தாலும், என்ன புக்குனு பார்க்காம இப்படி கிழிக்கலாமா ? இந்த புக்ல என்ன இருக்குன்னு ஒனக்குத் தெரியுமா? பள்ளிக்கூட பசங்க யாருக்காச்சும் குடுக்கலாம்னு இருந்தேன்" என்று திட்டிக் கொண்டிருந்தார். புக்கின் அட்டையில் ராஜா படம் மாதிரி ஏதோ தெரிந்தது.

நெரிசல் நீங்கி பேருந்து சற்று முன்னோக்கிச் சென்றவுடன், ஞாபகத்தில் பொறி தட்டியது. கழுத்தைத் திருப்பிக் கடையை மறுபடியும் பார்த்தேன். "அரசன் வேஸ்ட் பேப்பர் மார்ட்" என்று எழுதியிருந்த சிறிய பலகை கடையில் தொங்க விடப்பட்டிருந்தது கண்ணில் பட்டது!
********************************

என்றென்றும் அன்புடன்
பாலா

இப்பதிவுக்கு அப்போது வந்த மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...
Nalla irunthuthu bala!

10:57 PM, January 24, 2006

Anonymous said...
Bala

It was very good. The rain symbolism reflected the moods of Venu and friends.

Anbudan
Sa.Thirumalai

2:11 AM, January 25, 2006

நிலா said...
nice one

3:43 AM, January 25, 2006

இளவஞ்சி said...
பாலா, அருமையான பதிவு!

சூழ்நிலையின் விவரிப்பும் ஆட்டத்தின் விமரிசனமும் அருமையாக பொருந்திப்போகிறது.

ஒரு செயலை அனுபவித்துச்செய்கிறவனுக்கு அடுத்தவரது அங்கீகாரங்கள் முக்கியமில்லாமல் போகிறது. ம்ம்ம்.. இந்த மண்டைக்கனம் மட்டும் இல்லாமல் இருந்தால்!!

12:30 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
சுரேஷ், நிலா
பாராட்டுக்களுக்கு நன்றி.

திருமலை,
ரொம்ப நாள் கழிச்சு ஒரு கமெண்ட் உங்களிடமிருந்து வந்தது குறித்து மகிழ்ச்சி, நன்றி !!!

இளவஞ்சி,
உங்களிடமிருந்து வந்த இந்த பாராட்டு மிகுந்த உற்சாகத்தையும் (ஊக்கத்தையும்) அளிக்கிறது, அடங்கொப்புரானே, சத்தியமாச் சொல்றேன் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

12:40 PM, January 25, 2006

தெருத்தொண்டன் said...
பாலா, அருமையான பதிவு!

permutations, combinations என்று தலையைப் பிய்க்கும் விஷயங்களைக் கூட சில சாதாரண மனிதர்கள் சாதாரணமாக செய்துவிடுவார்கள் என்பது உண்மைதான். அதே சமயம் அதுகுறித்து அவர்கள் அலட்டிக் கொள்வதும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு!
நன்றி..பாலா..

12:47 PM, January 25, 2006

கோபி(Gopi) said...
சூப்ப்பருங்க. மறுபடி அந்த 'அரசனை' சந்திச்சீங்களா?

12:49 PM, January 25, 2006

கைப்புள்ள said...
அருமையா விவரிச்சிருக்கீங்க பாலா. திருவல்லிக்கேணியை என்னாலும் என்றும் மறக்க முடியாது. பெரிய தெருவில நிறைய சுத்தி இருக்கேன். ஆனாலும் சாரதி செஸ் கிளப் பத்தி கேள்வி பட்டதில்லை. ஹிண்டு ஹை ஸ்கூலை "ரெட் பில்டிங்"னு தான் நாங்க எல்லாம் கூப்பிடுவோம். நீங்க சொல்லற மாதிரியே ஒரு தாடி காரர் எப்பவும் ரெட் பில்டிங் எதிர்ல் உட்காந்திருப்பார். பல தடவை பார்த்து இருக்கேன். நான் சொல்லற காலம் 1985-1998. ஆனா அவரு செஸ் எல்லாம் விளையாடுவாரா என்னனு தெரியாது..அவரோட பேரும் தெரியாது. எப்பவும் பேப்பரும் ஒரு ரீபில்லும் வெச்சு எதாச்சும் எழுதிட்டே இருப்பார். அப்ப அவர் இளைஞர் கிடையாது...ஒரு 50 வயசு இருக்கும்.

பழைய நினைவுகளை ஞாபகப் படுத்துச்சு உங்க பதிவு. அதோட வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதையும்.

2:44 PM, January 25, 2006

தேசிகன் said...
பாலா மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

3:08 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
தெருத்தொண்டன் சார்,
நீங்கள் சொல்வது 100% சரி. பாராட்டுக்களுக்கு நன்றிகள் பல !

கோபி,
திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது ? ரொம்ப நாளா ஆளைக் காணோமே ???

அந்த "அரசனை" மீண்டும் சந்திக்கவில்லை !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

4:15 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
கைப்புள்ள அவர்களே,

//அருமையா விவரிச்சிருக்கீங்க பாலா. திருவல்லிக்கேணியை என்னாலும் என்றும் மறக்க முடியாது. பெரிய தெருவில நிறைய சுத்தி இருக்கேன்.
ஆனாலும் சாரதி செஸ் கிளப் பத்தி கேள்வி பட்டதில்லை.
//
முதற்கண் நன்றி. அந்த கிளப் 1980களில், அதாவது நீங்க சொல்ற காலத்துக்கு முன் !!!

//ஹிண்டு ஹை ஸ்கூலை "ரெட் பில்டிங்"னு தான் நாங்க எல்லாம் கூப்பிடுவோம். நீங்க சொல்லற மாதிரியே ஒரு தாடி காரர் எப்பவும் ரெட் பில்டிங்
எதிர்ல் உட்காந்திருப்பார். பல தடவை பார்த்து இருக்கேன். நான் சொல்லற காலம் 1985-1998. ஆனா அவரு செஸ் எல்லாம் விளையாடுவாரா
என்னனு தெரியாது..அவரோட பேரும் தெரியாது. எப்பவும் பேப்பரும் ஒரு ரீபில்லும் வெச்சு எதாச்சும் எழுதிட்டே இருப்பார். அப்ப அவர் இளைஞர் கிடையாது...ஒரு 50 வயசு இருக்கும்.
//
ரெட் பில்டிங் என்ற பெயரை நீங்கள் அறிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிடும் தாடிக்காரர் எனக்கும் பரிச்சயம் தான் :) தங்கள்
திருவல்லிக்கேணி வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்களேன் !!! இப்போது எங்கு இருக்கிறீர்கள் ? (விருப்பம் இருந்தால் கூறவும்).

தேசிகன்,
நன்றி. வசிஷ்டர் வாயால் "பிரம்மரிஷி" !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

4:16 PM, January 25, 2006

J.S.ஞானசேகர் said...
நன்றாக இருக்கிறது.

-ஞானசேகர்

5:02 PM, January 25, 2006

கைப்புள்ள said...
பாலா,
இருக்கற இடத்தை சொல்லறதுக்கு என்ன? இப்போ இருக்கறது இந்தூர், மத்திய பிரதேசம். அங்கே இப்ப திருவல்லிக்கேணி வாழ்க்கை தான்.(புரியலியா?...பாச்செலர் வாழ்க்கை...திருவல்லிக்கேணி பாச்செலர்களின் சொர்க்கம் இல்லியா?) நம்மூரைப் பத்தி எப்படிங்க சும்மா ஒரு பின்னூட்டத்துல சொல்ல முடியும். அதுக்குனு தனியா ஒரு ப்ளாக்கே போடலாம். பெரிய தெருவுல இப்ப ஞாபகத்துக்கு வர்றது...பிள்ளையார் கோயில், ஷண்முகம் நெய் கடை,வசந்தா புக் செண்டர்,CSI ஸ்கூல்,விஸ்வநாத ராவ் டெய்லர்,மாரா நர்சரி...எழுதிட்டே போகலாம். மலரும் நினைவுகள் சார்.

10:54 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
ஞானசேகர்,

mikka nanRi !!!

12:33 PM, January 26, 2006

ramachandranusha said...
நல்ல சிறுகதையைப் படித்த உணர்வு. "அரசன்" கேரக்டரை மறக்க முடியாம செஞ்சிட்டீங்க.

12:38 PM, January 26, 2006

enRenRum-anbudan.BALA said...
ஊக்கத்திற்கு நன்றி, உஷா !

//"அரசன்" கேரக்டரை மறக்க முடியாம செஞ்சிட்டீங்க.
//
பின்ன, 'அரசன்'னா சும்மாவா :-)

5:41 PM, January 27, 2006

வசந்தன்(Vasanthan) said...
நல்ல சுவாரசியமான பதிவு.

6:53 PM, January 27, 2006

enRenRum-anbudan.BALA said...
வசந்தன்,
'நல்ல சுவாரசியமான' பின்னூட்டத்திற்கு நன்றி :)

கோபிக்க மாட்டீர்கள் எண்டு நினைக்கிறேன் !!!!

12:21 PM, January 28, 2006

Anonymous said...
nandri bala.thiru allikkeni eppothume buddhisaalikalin iruppidam thaan. avarkal allikeniyaiyum Sri Parthasarathyaiyum marappathillai.nalla sol valam ungalukku.
aththuzhaai.

2:42 PM, January 28, 2006

பத்மா அர்விந்த் said...
முடிவை எதிர்பார்க்கவில்லை. அருமையாக இருந்தது. பீர்பாலின் கதை ஒன்றில் அரசனின் அகந்தையை போக்க அரசியின் தம்பி வந்து விளையாடுவது போலவும், விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பதியும் சொல்லியிருந்த கதை நினைவுக்கு வந்தது. அதில் சம்பவங்கள் முற்றிலும் வேறு.

6:38 PM, January 28, 2006

enRenRum-anbudan.BALA said...
பத்மா,
ரொம்ப நாள் கழித்து வருகை தந்துள்ளீர்கள் !!! பாராட்டுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.
என்றென்றும் அன்புடன்
பாலா

11:10 PM, January 28, 2006

star6. காந்தி யாருக்குத் தேவை ?

K P Fabian என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகளை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன்.
*********************************
காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பேசும்போது, 'இவரைப் போல் ரத்தமும் சதையுமாக ஒருவர் இப்பூமியில் உலவினார் என்பதை வருங்கால சந்ததியினர் நம்பத் தயங்குவார்கள்' என்கிறார்! உலகத்தின் தலை சிறந்த விஞ்ஞானியின் காந்தி குறித்த ஆச்சரியமும், மரியாதையும் இந்தியர்களாகிய நம்மிடமும் உள்ளதா ?
Photo Sharing and Video Hosting at Photobucket
இந்தியர்களில் பலர், பொருளாதாரச் சீரமைப்பு மற்றும் உலகமயமாக்கலை முன்னிறுத்தும் இன்றைய இந்தியாவில் காந்திக்கும் அவர்தம் கோட்பாடுகளுக்கும் எவ்வித இடமும் இருப்பதாகக் கருதுவதில்லை! 8% GDP வளர்ச்சியுடன் ஒரு பொருளாதார வல்லரசாக மாறி வரும் இன்றைய இந்தியா, காந்தி என்பவர் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஒரு வரலாற்று குறிக்கோளுக்காக வாழ்ந்து மறைந்தவர் என்பது தவிர, காந்தியையும், காந்தியத்தை எண்ணிப் பார்ப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று நம்புகிறது.

இந்தியாவின் தற்போதைய நிலையைப் பார்ப்போம். தற்போது பல இந்தியாக்கள் உள்ளன! ஒரு ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வரவழைக்க இயலாத "ஜொலிக்கும் இந்தியா" (Shining India), அன்னியச் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க "அபார இந்தியா" (Incredible India), உலகளவில் பேசப்படும், எண்ணிக்கையில் முன்னேறி வரும், பெரும்பணக்காரர்களை உடைய "பணக்கார இந்தியா" என்று சில உள்ளன. இவை தவிர, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மைத் துறைகளில் பிரகாசிக்கும் "அறிவுஜீவி இந்தியா", "எழுச்சி மிகு இந்தியா", "சென்சக்ஸ் இந்தியா" என்று மொத்தத்தில் பல இந்தியாக்கள் நிலவுகின்றன!

எந்த இந்தியாவை நம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது ? சரியானதை தேர்வு செய்ய (நாம் ஒரு ஜனநாயகமாக இருப்பதால்!), நமது பெரும்பான்மையான மக்களின் நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது! நாளை இந்தியா யு.என். பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு நிரந்தர உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனால் இந்தப் பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வில் என்ன மாற்றம் ஏற்பட்டு விடும் ? அர்ஜுன் சென்குப்தா கமிஷன் அறிக்கையின்படி, ஒழுங்கற்ற பணித்துறையில் (unorganized job sector), 77 சதவிகித மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் சம்பளத்தில் வாழ்கின்றனர். மிக அடிமட்டத்தில், 7 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 9 ரூபாயில் வாழ்கின்றனர்!

யு.என். பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்தக் கூறிய ஒரு வாதமாக இல்லாமல், நாம் கவனிக்கத் தவறிய ஒரு முக்கியப் பிரச்சினையை முன்னிறுத்தவே இவ்வாறு கூற வேண்டியுள்ளது. இந்தியா யு.என். பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர உறுப்பினராக ஆனால், மேற்கூறிய மக்களுக்கு "பாதுகாப்பான" குடிதண்ணீர் கிட்டுமா என்ன?

நாம் சுட்டிக்காட்டும் இந்த 83.6(77%) கோடி மக்கள் டிவி சேனல்களின் SMS சர்வேக்களில் கலந்து கொள்வதில்லை! இருப்பினும், நம்மை ஒரு ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டதால், இந்த 77 சதவிகித மக்களின் கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியிருக்கிறது. இங்கு தான் 1948-இல் காந்தி (அரசுத் துறைகளில், பொதுக் கொள்கைகளுக்கு திட்ட வடிவம் தரும் நபர்களுக்கு ஓர் அறிவுரையாக) கூறிய பேருண்மை வாய்ந்த சொற்களை நினைவு கூர்வதும், அவற்றை அந்த 83.6 கோடி மக்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியமாகிறது!

"ஒரு கொள்கை குறித்து உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டாலோ, சுயம் உங்களை ஆக்ரமிக்க தலைப்பட்டாலோ, ஒரு தேர்வுக்கு உங்களை ஆட்படுத்துங்கள். நீங்கள் சந்தித்ததிலேயே, ஏழ்மையால் மிகவும் பீடிக்கப்பட்ட அந்த மனிதனின் முகத்தை நினைவு கூர்ந்து உங்களையே கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள், 'நீங்கள் எடுக்கும் முடிவால், அந்த மனிதனுக்கு ஏதாவது பயனுண்டா? உங்கள் முடிவு அம்மனிதனது வாழ்வையும் விதியையும் அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஏதாவது வகையில் உதவுமா? உங்கள் முடிவு, வயிற்றுப்பசியிலும், அறிவுப் பசியிலும் வாடும் பல கோடி மக்களுக்கு அவற்றிலிருந்து விடுதலை பெற்றுத் தருமா?' மெல்ல உங்கள் ஐயங்களும், சுயமும் தானாகவே உருகிப் போய் விடும்"

அம்மக்களிடம் மேலும் கூறுவோம்: இதுவரை தொடர்ந்து ஆட்சி செய்த அரசுகளும், உயர் அரசு அலுவலர்களும், வறுமை ஒழிப்புத் திட்டங்களை வடிவமைத்தபோது, காந்தியின் வார்த்தைகளை மனதில் கொண்டு செயல்பட்டிருந்தால், நம் நாட்டின் முகம், வறுமையால் பீடிக்கப்பட்டு, இன்று இத்தனை கோரமாக காட்சியளிக்காது!

இவற்றையெல்லாம் கேட்டு அம்மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் ?

சரி, மீதமுள்ள 23 சதவிகித மக்களுக்கு காந்தியின் தேவை உள்ளதா ? உள்ளது!

எப்படி, நமது ஜனநாயகத்தின் தரம் மிகவும் தாழ்ந்து விட்டது. சமூக விரோதிகள், மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டி வெற்றி பெறுகின்றனர், நாட்டைச் சுரண்டும் கொள்ளைக்காரர்கள் எப்படியோ தண்டனையிலிருந்து தப்பி விடுகிறன்றனர்! பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், உறுப்பினர்களின் 'திட்டமிட்ட' குறுக்கீடுகளால் விவாதங்களில் தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டு, மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டிய பொன்னான நேரம் தாராளமாக வீணடிக்கப்படுகிறது. மேற்கூறியவை பற்றிக் கவலைப்படுபவர்களுக்கு காந்தியின் தேவை உள்ளது! காந்தி பொதுவாழ்விலும், அரசியலிலும், மதிப்புக்கு உரிய கோட்பாடுகளை போதித்ததோடு, அவற்றை கடைபிடிக்கவும் செய்தார்!

நாமெல்லாம் உண்மையானவராகவும், அச்சமில்லாதவராகவும், லட்சியவாதிகளாகவும், அகிம்சாவாதிகளாகவும் இருக்க வேண்டிய அவசியத்தை காந்தி வலியுறுத்தினார். இன்றைய சூழலில் கூட, சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், காந்தியின் பொருளாதாரத் தத்துவத்திற்கு (திட்டங்களாக) செயல் வடிவம் தர முடியும்! இன்றைய வன்முறைச் சூழலைப் பார்க்கும்போது, காந்தி சொன்ன ... கண்ணுக்குக் கண் என்பது ஒரு கட்டத்தில் உலகத்தையே குருடாக்கி விடும் ... என்பதை நினைவு கூர்வது அவசியமாகிறது.

ஆகவே, நல்லதோர் இந்தியாவை (ஏன், உலகத்தை) விரும்பும் அனைவருக்கும் காந்தி என்பவர் தேவையாகிறார்! மேலும், காந்தி இன்று நம்மிடையே இருந்திருந்தால், தீவிரவாதம் இந்த அளவுக்கு நிச்சயம் தலை விரித்து ஆடாது என்று ஓர் எண்ணம் தோன்றுகிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும், காந்தியத் தீர்வு என்று ஒன்று இருப்பதாக வாதிடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல! காந்தியத்தில் பல நல்ல விஷயங்கள் உள்ளன, அவற்றைப் புரிந்து கொள்வதும், கடைபிடிப்பதுமே நாம் காந்திக்கு செய்யும் அஞ்சலி, அவரை வழிபடுவதின் மூலம் அல்ல !

காந்தியே சொன்னது போல, "இவ்வுலகத்திற்கு போதிக்க என்னிடம் எதுவும் இல்லை! உண்மையும், அகிம்சையும், இவ்வுலகில் உள்ள மலைகளைப் போல் பழமையானவை!"
**************************

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

P.S:

காந்தி சொன்ன ஏழு கொடும்பாவங்கள்:

1. உழைப்பால் ஈட்டாத செல்வம்


2. மனசாட்சிக்கு புறம்பான இன்பம்

3. மனிதத்தை முன்வைக்காத அறிவியல்

4. நற்குணம் சாரா ஞானம்

5. கோட்பாடில்லா அரசியல்

6. ஒழுக்கமில் வணிகம்

7. தியாகம் அறியா வழிபாடு

Monday, December 03, 2007

Star5. போபால் விபத்தில் பலியான அப்பாவிகளுக்கு ஓர் அஞ்சலி!

இன்றோடு 23 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. தமிழ் இணையத்தில் இன்று எழுதும் பல இளைஞர்கள் இது பற்றிய முழு விவரங்கள் அறிந்திருப்பார்களா என்பது கூட சந்தேகமே.

1984 ஆம் ஆண்டின் டிசம்பர் 3 அதிகாலையில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த 40 டன் மித்தைல் ஐஸோசயனேட் ( Methyl Isocyanate) என்கின்ற விஷ வாயு கிட்டத்தட்ட 2500 முதல் 5000 பேர் ஒரே இரவில் பிணக் குவியலாக மாற்றிய தினம் இது.(8 லட்சம் பேர் வசித்தனர் போபாலில் அப்போது)





<

மேலும் 20000 பேர் படிப்படியாக இதன் தாக்கத்தால் பாதிக்கப் பட்டு மடிந்தனர் மற்றும் 2 லட்சம் பேர் இந்தக் கசிவால் பாதிக்கப் பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றும் கூட மருத்துவமனைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் பார்வைக் கோளாறு,நுரையீரல் கோளாறு,சிறுநீரகக் கோளாறு, மலட்டுத்தன்மை,நோய் எதிர்ப்பு சக்தியின்மை போன்ற வியாதிகளால் அவதிப்பட்டு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவில் காசநோய் உள்ளவர்களது சராசரியை விட நாலு மடங்கு அதிகம் சராசரி போபாலில் இன்றளவும் நிலவுகிறது




யூனியன் கார்பைடு கம்பனி மீதான கிரிமினல் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.ஏனென்றால் அந்தக் கம்பெனியே தலை மறைவானதும் அதற்கெதிராக இந்திய அரசு வலுவாக செயல் படாததும் ஒரு புறமென்றால் அந்த கம்பனியை 'டோவ் கெமிகல்ஸ்' என்ற கம்பெனி வாங்கி , இந்தியாவில் மேலும் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதும், அம்பானியின் ரிலையன்ஸ் அவர்களுடன் கை கோர்ப்பதும், ரத்தன் டாடா போன்றோர் ஆதரவு தருவதும் என்னவென்று சொல்ல?

யூனியன் கார்பைடின் அப்போதைய தலைவராக இருந்த வாரன் ஆண்டர்சன் இன்றும் அமெரிக்காவில் சுக வாழ்வு வாழ்கிறார்.விஷ வாயு (இரசாயன)ஆயுதங்கள் வைத்திருப்பதாக சந்தேகப் பட்டதின் பேரிலேயே ஈராக் நாட்டையே துவம்சம் செய்து சதாமை தூக்கிலேற்றியும் ஓயாத அமெரிக்கா வாரன் ஆண்டர்சனை விசாரணைக்காக இந்தியாவிற்கு அனுப்ப மறுத்தது எந்த ஊர் நாட்டாமையோ தெரியவில்லை.

இந்தியா கல்கத்தா டெஸ்டில் ஜயிக்குமா ஜயிக்காதா , நடிகை காவேரியை காமெரா மேன் வைத்தி ஏமாற்றினாரா இல்லையா என பதை பதைக்கும் ஊடகங்களுக்கு போபால் பற்றி அந்த நிகழ்வு, நினைவு, சோகம் மற்றும் படிப்பினை பற்றி கூற இரண்டே இரண்டு நிமிடம் ஒதுக்க முடியவில்லை.ஏனென்றால் 23 வருடங்களுக்கு முன் இழந்த 22000 உயிர்கள் அவ்வளவு சுவாரசியமில்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற விஷயம் "டோவ் கெமிகல்ஸ்" கம்பெனியின் சட்டவல்லுனர் அபிஷேக் மான் சிங்வி தான் போபால் விஷ வாயு கசிவிற்கு பிறகு அது சம்மந்தமாக பிரதம மந்திரி அலுவலகத்திற்கு அன்று சட்ட ஆலோசனைக் குறிப்புகள் கொடுத்தவர். ( இவர்களுக்கெல்லாம் மனிதாபிமானம் என்ற ஒன்றே கிடையாதா...எல்லாமே பணம் மட்டும்தானா ? )

இத்தனையிலும் ஒரு ஆறுதலான விஷயம் சென்னை மற்றும் மும்பை IIT மாணவர்கள் மனிதாபிமான அடிப்படையில் "டோவ் கெமிகல்ஸ்" வேலையை புறக்கணித்ததுமல்லாமல் அவர்களை கல்லூரி வளாக தேர்வுக்கும் வரவொட்டாமல் தடுத்து விட்டனர்.கான்பூர் ஐ ஐடியிலும் இது போன்றதொரு நடவடிக்கை பரிசீலிக்கப் படுவதாகவும் தெரிகிறது.

மனித வரலாற்றின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தில் பலியான 22000 உயிர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் அதே வேளையில் இது போன்ற துயரங்கள் மேலும் நடவாமலிருக்க நம்மால் இயன்றதை செய்வோம் என்று இந்த நாளில் உறுதி கொள்வோமாக.

star4. அணுசக்தி ஒப்பந்தம் - உரத்த சிந்தனைகள்

123 ஒப்பந்தம் தொடர்பான இடதுசாரி (நந்திகிராம் பிரச்சினையைத் தொடர்ந்து சற்று தடம் புரண்டுள்ள) எதிர்ப்பும், பிஜேபியின் நிலையும், காங்கிரஸின் இரண்டுங்கெட்டான் நிலைமையும் அனைவரும் அறிந்தது தான். சோனியா அம்மையார் சமீபத்தில் திருவாய் மலர்ந்து, "இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகள்" என்று கூறியதை அடுத்து, ஒரு புள்ளி விவரத்தை ஆராய்வது அவசியமாகிறது.

ஆகஸ்ட் 2006 திட்டக் கமிஷன் அறிக்கை ஒன்று, 2031-32 வரை இந்தியாவின் ஆண்டொன்றுக்கான 8 சதவிகித GDP தொடர் வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதும் 11 வகை எரிபொருள் கலப்புகள் (Fuel Mix) தரவல்ல சாதக/பாதகங்கள் குறித்துப் பேசும்போது, இன்றிலிருந்து 2031-32 வரை இந்தியாவின் அணுசக்தித் திறன் 20 மடங்காக உயர்ந்தாலும் நாட்டின் மொத்தத் தேவையில் அணுசக்தியின் பங்கு 4-6.4% மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடுகிறது. இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவரான அனில் ககோத்கரும் இவ்வறிக்கை தயாரித்த குழுவில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

அதாவது, அணுசக்தி எக்காலத்திலும் நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு தீர்வாகாது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் காங்கிரஸ் கட்சியும், பிரதமரும் 123 ஒப்பந்தம் ஒன்றே நம் நாட்டின் நெடுங்கால மின்சக்தி பற்றாக்குறைக்கு ஒரே தீர்வு என்று கூறுவது பொதுமக்களை ஏமாற்றும் தந்திரோபாயம் அன்றி வேறென்ன? உண்மையில் பாதுகாப்புத் தொடர்பான நமது அணுசக்தி சுதந்திரத்தை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் முயற்சி இது என்பது தெளிவு! அமெரிக்காவுடன் பெரியண்ணன்-தம்பி வகை உறவு நமக்கு நிச்சயம் தேவையில்லை.

ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்துக்களை (குறிப்பாக, Hyde Act பற்றிய சந்தேகங்களை) அரசு நேர்மையாக ஆராயாமல் இருப்பதும், பிரதமர் ஒப்பந்தத்தை விட்டுக் கொடுக்காமல் பேசி வருவதும், ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதை தனது தனிப்பட்ட தோல்வியாக பிரதமர் கருதுவதால் இருக்கலாம். சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கூட, பிரதமர் பங்கு கொண்டு எதுவும் கூறாதது, சிறுபிள்ளைத்தனமான பிடிவாதமாகத் தான் தோன்றியது.

போக்ரான்-II வாயிலாக இந்தியாவை அணுசக்தி நாடாக அறிவித்த பிஜேபியை, ஒப்பந்தத்திற்கு ஆதரவாக (பிஜேபியின் இடதுசாரி கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை சாமர்த்தியமாக பயன்படுத்தி) இட்டு வர மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் அமெரிக்கத் தூதர் முல்போர்ட், சமீபத்தில் அத்வானியை சந்தித்தது குறிப்பிட வேண்டியது.

சமீபத்தில், 123 ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்த நிக்கோலஸ் பர்ன்ஸ், "இன்னும் 20-30 ஆண்டுகள் கழித்து, பல அமெரிக்கர்கள், அமெரிக்காவின் இரண்டு அல்லது மூன்று முக்கியக் கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியாவையும் (ஜப்பான், யுரோப்பிய கூட்டமைப்பு போல) கருதுவார்கள்" என்று கூறியிருப்பது அமெரிக்க நோக்கத்தை தெளிவாக்குகிறது! இந்த ஒப்பந்தம் மூலம், தனக்கான சாதக/பாதகங்கள் குறித்து அமெரிக்கா தெளிவாகவே உள்ளது. ஆனால், நம் அரசோ, ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களுடன் அனாவசிய சச்சரவு செய்து கொண்டும், வீட்டுக் கணக்கையும் சரிவரச் செய்யாமலும், எப்படியாவது ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அமெரிக்காவின் அடிவருட அலை பாய்கிறது!

அப்படியே அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தாலும், அணு ஆலைக்கு பொருட்களை விற்கும், பெரும்பாலும் தனியார் வசம் உள்ள, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு அவற்றை விற்பனை செய்ய முன் வர மாட்டார்கள். ஏனெனில், அணு ஆலையில் விபத்து ஏற்பட்டும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு என்று வரும்போது, அந்த நிறுவனங்கள் பெரும்பாதிப்புக்கு (யூனியன் கார்பைட் விவகாரம் போல) உள்ளாகும் சூழல் நிலவுகிறது. இந்தியாவில், அம்மாதிரி நஷ்ட ஈடுக்கு உச்சவரம்பை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்படவில்லை. ஆனால், அரசு கட்டுப்பாட்டில் உள்ள ரஷிய நிறுவனங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை என்றே கூறலாம். அதனால், ரஷிய நிறுவனங்களே, பெரும்பான்மையான இந்திய அணுசக்தி காண்ட்ராக்டுகளை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆகவே, கம்யூனிஸ்ட்கள் 123 ஒப்பந்தம் குறித்து அவ்வளவு டென்ஷன் ஆக வேண்டியதில்லை :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Star3. நரேந்திர மோடி, தெஹல்கா, குஜராத் தேர்தல் ...

சமீபத்தில் தெஹல்கா, கோத்ரா ரயில் எரிப்பு விவகாரத்தைத் தொடர்ந்து நடந்தேறிய வன்முறை பற்றி பிஜேபி மற்றும் விஹெச்பி பிரமுகர்கள் சிலர் பேசிய பேச்சை (அவர்களுக்குத் தெரியாமல் கேமராவில் படம் பிடித்து) அம்பலப்படுத்தியுள்ளது. வன்முறையின் போது, அரசு நடவடிக்கைகளின் மெத்தனம் குறித்தும், பின் குற்றவாளிகளை காப்பாற்ற அரசே முனைந்தது பற்றியும் சந்தேகங்கள் நிலவி வந்தாலும், இப்போது தெஹல்கா வாயிலாக மாநில அரசு வன்முறைக்கு துணை போனது உண்மை தான் என்பது நிரூபணமாகி விட்டது!

மோடி குறித்த 'புரிதல்' இல்லாதவருக்கு வேண்டுமானால், தெஹல்கா செய்த அம்பலம் ஆச்சரியத்தைத் தரலாம். ஏதோ தீவிரவாதிகளை வேட்டையாடியது போல, பெண்களையும், முதியவர்களையும் வெட்டிச் சாய்த்தது குறித்து அந்த 'வீடியோ' கனவான்கள் பெருமையாக பேசியிருப்பதைக் கேட்டபோது, மனது கனத்துப் போனது. என்ன மாதிரி ஜந்துக்கள் இவர்கள் :(

முதல்வர் மோடி, வீடியோவில் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று (குறைந்த பட்சம்) மறுப்பு தெரிவிக்காமல், தெஹல்கா டேப்பை ஒளிபரப்பிய சேனல்களை இருட்டடிப்பு செய்ததின் மூலம், கோரமான உண்மையை மூடி மறைக்க முடியுமா? அவரின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. அது போலவே, குஜராத் தேர்தலுக்கு முன் தெஹல்கா இதை வெளியிட்டதற்கு காங்கிரஸை குற்றம் சாட்டி அரசியல் நோக்கம் கற்பிப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

பொதுவாக, அரசியல்வியாதிகள், நம்பிக்கைக்குரிய ஆட்களிடமே, தாங்கள் செய்த குற்றங்கள் பற்றிப் பேச / ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். ஆனால், இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வன்முறையை பெருமைக்குரியது போல பீற்றிக் கொண்டதுக்கு காரணமாக நான் நினைப்பது, குஜராத்தில் இஸ்லாமிய வெறுப்பு என்பது அரசியல் ஆதாயம் (அதாவது தேர்தலில் ஓட்டுகளாக) பெற்றுத் தரும் விஷயமாக கருதப்படுவது தான்! மோடி கூட, அதே காரணத்தால் தான், தெஹெல்கா வீடியோ பேச்சுகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு பேச்சுக்குக் கூட மறுப்பு தெரிவிக்கவில்லை!

நம் சமூக வரலாற்றில், இது போன்ற வன்முறை நிகழ்வுகள் விரவிக் கிடக்கின்றன! 1989-இல் நடந்த பகல்பூர் வன்முறை குறித்த வழக்கு தற்போது தான் முடிவடைந்து, பேருக்குச் சிலரே தண்டனை பெற்றுள்ளனர். 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் நேரடியாக ஈடுபட்ட பலர், இன்று உயர் அரசியல் பதவிகளில் உள்ளனர்! 1993 மும்பை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடந்தேறிய வன்முறை தொடர்பான வழக்கு முடிவடைய 14 ஆண்டுகள் ஆனதற்குக் காரணம் மகாராட்டிரத்தில் ஆட்சி செய்த மாநில அரசுகள் (காங்கிரஸையும் சேர்த்து) தான் என்றால் அது மிகையில்லை!

தெஹல்கா வீடியோ ஆதாரத்தை வைத்து யாராவது வழக்கு தொடர்ந்து அதன் முடிவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை! அதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ? வழக்கை நீர்த்துப் போக வைக்க என்னென்ன முயற்சிகள் செய்யப்படுமோ? ஏன் காங்கிரஸே கூட வழக்கு தொடரலாமே? ஆனால், செய்ய மாட்டார்கள்! சமீபத்தில் பிஜேபியிலிருந்து காங்கிரசுக்குத் தாவியவர்கள் பலர் மீது குஜராத் வன்முறைக்கு துணை போனதாக குற்றச்சாட்டு இருக்கிறது!

2002 வன்முறைக்குப் பின், மோடி தன்னை ஒரு புது மனிதராகக் காட்டிக் கொள்ள ஓரளவு முயற்சி எடுத்திருக்கிறார் என்பதும் உண்மையே. சிறப்பான நிர்வாகத்தின் மூலம், திட்டங்கள் மூலம், மோடி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்றிருப்பினும், அவரது கடந்த காலம் அவரை விடாமல் துரத்துகிறது! யாரும் அந்த கொடிய வன்முறையை மறக்கவும், மோடியை மன்னிக்கவும் தயாராக இல்லை! 'Gujarat shining' கோஷத்தோடு, பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் குறித்த நடுத்தர இந்துக்களின் அச்சங்களையும் வரும் தேர்தலில் மோடி தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்.

மேலும், மோடியின் சந்தேகமற்ற இந்து சார்பு நிலையே, பல NRI குஜராத்திகள் அம்மாநிலத்தில் பெருமளவு முதலீடு செய்வதற்கு முக்கியக் காரணம் என்று என் குஜராத்தி நண்பன் திட்டவட்டமாக கூறுவது சிலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம்.

அது போலவே, குஜராத் தேர்தலில் மோடி வென்று மீண்டும் ஆட்சிக்கு (தெஹல்காவையும் மீறி!) வரக் கூடிய சாத்தியம் இருப்பதாகவே தெரிகிறது! ஏன், மோடி மீண்டும் ஆட்சிக்கு வர தெஹல்கா விவகாரம் உதவியாகக் கூட இருக்கலாம்! ஏனெனில், ஏற்கனவே இந்து-முஸ்லிம் என்று பிளவுபட்டுக் கிடக்கும் மாநிலத்தில், இது போன்ற விஷயங்கள் மூலம் polarization அதிகரிப்பது மோடிக்கு சாதகமாகவே அமையலாம்.

இம்முறை காங்கிரசும், தங்கள் வாக்குகள் சிதறிப் போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், (சென்ற முறை போல் ஆகி விடாமல் இருக்க) NCP-யுடன் கூட்டணி வைத்துள்ளது. அது போலவே, பிஜேபியிலிருந்து விலகி வந்தவர்களுக்கும் நேசக் கரம் நீட்டியுள்ளது. படேல் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை அரவணைத்து, காங்கிரஸ் பலருக்கு சீட்டு கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகாத்மாவின் சத்யாகிரக இயக்கத்தின் நூறாவது ஆண்டு நிறைவுத் தீர்மானத்தை, சமீபத்திய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது கூட குஜராத் தேர்தலை முன்னிட்டுத் தான். குஜராத் வன்முறையால் உண்டான பிரிவினைச் சூழல் மாறுவதற்கு காந்தி போதித்த இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் உதவுமா என்பதற்கான விடை தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்!

அகிம்சாவாதி மகாத்மா பிறந்த புண்ணிய பூமி இம்மாதிரி அவலச் சூழலில் சிக்கிக் கிடப்பது தான் பெரிய கொடுமை, வேறென்னத்தச் சொல்ல!

Star2. தீவிரவாதம் தின்ற இளைஞன்

சென்ற வருடம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி, தலையில் அடிபட்டு, பெரும் உயிர் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்த அமித் என்ற 21 வயது இளைஞரைப் பற்றியது இப்பதிவு! அவர் கடந்த ஒரு வருடமாகவே சுயநினைவு அற்ற நிலையில் (ஒரு வித கோமா நிலையில்), மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் (வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் இவரைப் போல ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்திருப்பீர்கள்), தனது பெற்றோர் மற்றும் சகோதரரால் பேணப்பட்டு, உடல்நிலையில் முன்னேற்றம் அதிகம் இன்றி, வீல்சேரிலும் படுக்கையிலும் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். விபத்திற்கு முன் ஒரு சிறந்த வாலிபால் ஆட்டக்காரராக இருந்த இவருக்கு, இப்போது மருத்துவமனை அறையே வாழ்க்கையாகி விட்டதற்கு காரணம் தீவிரவாதம் என்ற நம் நாட்டை பிடித்து ஆட்டும் கொடுநோய்!
Photo Sharing and Video Hosting at Photobucket
என்றாவது ஒரு நாள் தன் மகன் பூரண குணமடைந்து விடுவான் என்ற (ஒரு தாய்க்கு மட்டுமே உரிய) முழு நம்பிக்கையில், மீனா சிங் தன் மகனை ஒரு குழந்தையைப் போல் பேணி, அவரது செயலிழந்த / பலம் குன்றிய கை கால்களை தினமும் நீவி, நாள் முழுதும் அவருடனே இருந்து பணிவிடை செய்கிறார். மருத்துவர்கள் அமித்தின் நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறி வந்தாலும், அந்த தாய் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து நல்லது நடக்கும் என்று திடமாக நம்புவது நம்மை அசர வைக்கிறது.

அமித்திடம் செயல், பேச்சு எதுவும் இல்லாவிட்டாலும், தாங்கள் பேசுவதை அவன் புரிந்து கொள்கிறான் என்று அமித்தின் குடும்பத்தினர் நம்புகின்றனர். அமித்தின் ஆகாரம் முழுதும் குழாய் வழியாகத் தான். தனது இளைய மகனின் நிலைமையால் மனதளவில் உடைந்து போயிருக்கும் அவனது தந்தை தினேஷ் சிங், அமித் உடல் நிலையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படாதா, அவனுக்கு சுயநினைவு திரும்பாதா என்ற ஆதங்கத்தில், யாரோ பரிந்துரைத்த ஆயுர்வேத எண்ணெயை தினமும் அமித்தை நுகர வைத்துப் பார்க்கிறார்!

ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி புரியும் அமித்தின் மூத்த சகோதரர், வாரத்தில் 5 நாட்கள், இரவுப் பொழுதுகளை தன் தம்பிக்கு துணையாக மருத்துமனையில் கழித்து வருகிறார். வாரம் ஒரு முறை தான் வீட்டுக்கே செல்கிறார். அந்த குடும்பத்தினரின் வாழ்க்கையே அந்த மருத்துவமனையுடன் பிணைந்து விட்டது. அமித் ஒரு கணம் கூட தனிமையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதற்கு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அக்குடும்பத்தினர் படும் பாடும், அவர்களின் வேதனையும்,வலியும் நம்மை கலங்க வைக்கிறது.
Photo Sharing and Video Hosting at Photobucket
"எங்களுக்குப் பின் யார் அவனை இப்படி பார்த்துக் கொள்வார்கள்" என்று அவனது தந்தை கண்ணில் நீர் மல்க, பரிதாபமாகக் கேட்கும்போதும், அமித்தின் தாய் மீனா, "எங்களுக்கு கடவுள் செய்தது போல், வேறெந்த பெற்றோருக்கும் ஏற்படக் கூடாது" என்று கூறும்போதும், அவர்கள் குரலில் தென்படும் கவலையும், சோகமும் நம்மை உருக்குவதாக உள்ளது.

எல்லா நடுத்தர குடும்பங்களை போல, அக்குடும்பத்திற்கும் இருந்த கனவுகள், ஒரு ஜூலை மாத மாலை வேளையில், தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி சிதறடிக்கப்பட்டு விட்டன! ஆனால், அப்பெற்றோர், தீவிரவாதிகள் குறித்தோ, வழக்கு இதுவரை தொடங்காதது பற்றியோ அக்கறை எதுவும் காட்டுவதில்லை. அப்பெற்றோரின் வாழ்வில் மிச்சமிருப்பதெல்லாம், தங்கள் இளைய மகன் ஒரு நாள் உடல் நலம் பெற்று எழுந்து விடுவான் என்ற தளராத நம்பிக்கை மட்டுமே !

நாமும் நம்புவோம், பிரார்த்திப்போம்!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: rediff.com

Star1. எனது நட்சத்திர வாரம் பற்றி

தமிழில் வலை பதியத் தொடங்கி ஒரு மூன்றரை ஆண்டுகள் கழித்து தமிழ்மண நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது :) நட்சத்திர வாரத்தின்போது தினமும் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் நிலவுவதும் தெரியும்!

என் இவ்வாரப் பதிவுகளில் ஸ்பெஷலாக எல்லாம் எதுவும் இருக்காது. எப்போதும் எழுதுவது போல எனக்கு நெருக்கமான விஷயங்களும், சில நிகழ்வுகள்/பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டமும் பதிவுகளில் காணப்படும். இந்த வாரம், அரசியல், சமூகம், ஆன்மீகம், தொழில்நுட்பம் என்று கலந்து கட்டி பதிவுகள் வரும். புதிய பதிவர்களுக்காக, கொஞ்சம் அரைத்த மாவையும் அரைக்க (மீள் பதிவுகள் இட) உத்தேசம்!

அறிவுஜீவித்தனமாக எதுவும் எழுத மாட்டேன்! (யாரும் பயப்படத் தேவையில்லை;-)) என்னிடம் இருக்கும் சரக்கை வைத்து ஜீவிக்க (சுவாசிக்க!) எல்லாம் முடியாது, ஏதோ ஜீவனம் தான் பண்ண முடிகிறது என்பதால் :) "மூத்த" (வயதில் அல்ல!) பதிவர் என்ற பட்டத்துக்கு பங்கம் வராதவாறு இந்த நட்சத்திர வாரத்தை ஒரு மாதிரி ஒப்பேற்றி விடவே உத்தேசம் :)

எனது இவ்வாரப் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட இயலாத வாசகர்கள், குறைந்தபட்சம் தமிழ்மணப் பட்டையில் உள்ள "+"ஐ அமுக்கி விட்டுச் செல்லவும் ?! ஏனெனில், "-"ஐ அமுக்குவதால் எந்தப் புண்ணியமும் இல்லை, எனது இவ்வாரப் பதிவுகளின் சுட்டிகளுக்கு (இந்த வாரம் முழுதும்) தமிழ்மணத்தின் முதல் மற்றும் நட்சத்திரப் பக்கங்களில் பிரதானமாக இடமளிக்கப்படும் காரணத்தால் ;-)

இவ்வார இறுதியில், எனது நட்சத்திர வாரம் எப்படி இருந்தது என்று ஒரு வாக்குப் பதிவு நடத்தவும் எண்ணம் உள்ளது, பார்க்கலாம்.

தமிழ்மணத்திற்கும், வாசகர்களுக்கும் நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, November 30, 2007

372. டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் கார்

இது சீக்கிரமே மார்கெட்டுக்கு வந்து விடும் என்று நம்பப்படுகிறது. குறைந்த விலையில் மிக அழகான டிசைனுடன் கூடிய காரைப் பார்த்தாலேலே, வாங்குவதற்கு ஆசை வந்து விடும் :)

Photo Sharing and Video Hosting at Photobucket

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, November 22, 2007

ரஜினி ராம்கியை வாழ்த்துவோம் !

நண்பர்களே,

ஒரு நல்ல செய்தி. நேற்று காலை, நண்பர் ரஜினி ராம்கிக்கு "அப்பா" என்ற அந்தஸ்து கிட்டியது :) அவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, அவரது குட்டி மகளின் நீண்ட ஆயுளுக்கு பிரார்த்திப்போம் ! "புதிய" தந்தையின் இப்போதைய கவலை, மகளின் விடாத அழுகை :)

எ.அ.பாலா

Wednesday, November 14, 2007

370. நந்திகிராம் vs அணுசக்தி ஒப்பந்தம் - கம்யூனிஸ்ட்களின் பல்டி

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தீவிர எதிர்ப்பு காட்டி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ, சிபிஐ(M)) தற்போது தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து, இந்தியா IAEAவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதற்குக் காரணம், நந்திகிராம் விவகாரம் என்றால் அது மிகையாகாது!  நந்திகிராம் பிரச்சினையினால் சிபிஐ(M) பலதரப்பு நெருக்கடிகளை எதிர்கொண்டு, பெரும் சிக்கலில் உள்ள நிலையில், இந்த பல்டியை ஆளும் காங்கிரசுடன் செய்து கொண்ட 'பேரமாக' மட்டுமே பார்க்க இயலுகிறது.  இல்லையென்றால், இவர்களின் இந்த திடீர் 'ஞானோதயத்திற்கு' வேறென்ன காரணம் இருக்க இயலும் ??? 

அதனால் தான் என்னவோ, நந்திகிராமில் சரியான நேரத்தில் / தேவையான நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து மேற்கு வங்க அரசை கவர்னர் கடுமையாக சாடிய பின் கூட, நமது பிரதமரோ, எங்கு பிரச்சினை என்றாலும் ஓடிச் சென்று விசாரிக்கும் சோனியா காந்தியோ, இந்தப் பிரச்சினையில் வாய் மூடி மௌனமாக உள்ளனர்!  வேறு ஏதாவது கட்சி ஆட்சி நடத்தும் மாநிலமாக இருந்திருந்தால், மத்திய அரசு மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கும். ஏன், கவர்னர் ஆட்சியே ஏற்பட்டிருக்கலாம் ! 

இந்தப் பிரச்சினையில் உச்ச்க்கட்ட காமெடி என்னவென்றால், மாவோயிஸ்ட்களுடன் சேர்ந்து கொண்டு மம்தா பானர்ஜி வன்முறை செய்வதாக பிரகாஷ் கரத் திருவாய் மலர்ந்திருப்பது தான் !  பிரச்சினையை சுமுகமாக தீர்க்க ஒரு எழவும் செய்யாமல், கவர்னரின் நியாயமான பேச்சுக்கு சிபிஐ(M) கடுமையான கண்டனம் வேறு தெரிவிக்கிறது.

கம்யூனிஸ்ட்கள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த நிலைப்பாட்டிலிருந்து மொத்தமாக பல்டி அடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று ஏற்கனவே ஒரு <a href="http://balaji_ammu.blogspot.com/2007/08/352-123.html ">பதிவில்</a> குறிப்பிட்டிருந்தேன்.  அப்படி நடந்து, ஒப்பந்தம் கையெழுத்தானால், நாட்டின் மொத்த எனர்ஜி தேவையில் 5% மட்டுமே பூர்த்தி (அதுவும் 2020-இல்) செய்யக்கூடிய, விலை அதிகம் தந்து பெற வேண்டிய அணுசக்திக்காக என்ற போர்வையில், (ஒரு பிரதமரின் விருப்பத்திற்காக மட்டும்) அமெரிக்காவின் அடிவருடியாக நாம் காலம் தள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் !

அணு ஆயுத பரிசோதனை செய்யும் நமது சுதந்திரத்திற்கும், தேசிய பாதுகாப்பு நலனுக்கும் எதிராக இருக்கும் Hyde Act பற்றிய குறிப்பு 123 ஒப்பந்தத்தில் இருக்கும் வரை, இந்த ஒப்பந்தம் நிச்சயம் ஏற்க இயலாத ஒன்று.
 

எ.அ.பாலா

*** 370 ***

Tuesday, November 06, 2007

369. உடல் நலத்தை கெடுக்கும் தீபா'வலி'

வர வர தீபாவளியை நினைத்தால அலர்ஜியாக இருக்கிறது. ஒரு வாரம் முன்பே பட்டாசு சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்து விடுகிறது. பிறந்ததிலிருந்து, இந்த ஆறு வருடங்களாக, என் இரண்டாவது மகளுக்கு தீபாவளி என்றாலே நடுக்கம் தான். இந்த சத்தமும், புகையும் அவளை வெகுவாக பாதிப்பதால், ஒவ்வொரு தீபாவளி அன்றும் அவளுக்காக வீட்டுக்கதவுகளையும், சன்னல்களையும் திறக்கவே மாட்டோ ம்! நேற்று NDTV-யில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். இந்த பட்டாசுகளால் எவ்வளவு பெரிய உடல் நலக்கேடு என்பது தெளிவாக விளங்கியது. சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு:

1. 2005-இல் உச்சநீதி மன்றம் 120 டெசிபல்களுக்கு மேலாக ஒலிச்சக்தி கொண்ட பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ தடை விதித்திருந்தது. ஆனால், அதை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. இப்போதுசந்தையில் உள்ள 90% பட்டாசுகள் (ஊசிப் பட்டாசு, வெங்காய வெடி போன்றவற்றைத் தவிர!) 140 டெசிபல்களுக்கு மேல் ஒலி ஏற்படுத்தபவையே! நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, பட்டாசின் அட்டையின் மீது 'தயாரித்த மாதம்' மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும், எந்த 'வருடம்' என்ற தகவல் இருக்காது. மாட்டிக் கொண்டால், அந்த பட்டாசு 2005-க்கு முன் தயாரிக்கப்பட்டது என்று சுலபமாக கூறி தப்பி விடலாம்! அது போலவே, 10 மணிக்கு மேல் வெடி வைக்கக் கூடாது என்ற கோர்ட் / போலீஸ் உத்தரவையும் யாரும் கண்டு கொள்வது கிடையாது.

2. பட்டாசு வெடிப்பதால் மூன்று வித தீங்குகள் ஏற்படுகின்றன. ஒன்று, அதிலிருந்து வரும் ஒளி கண்ணுக்குக் கெடுதல், இரண்டு, வெடிச்சத்தத்தால் கேட்கும் திறனுக்கு பாதிப்பு என்பதுடன், முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒருவித trauma ஏற்படுகிறது. நோயாளிகள் எத்தனை அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள் என்பதை சற்று யோசித்தால், குறைந்தபட்சம் பெரும் சத்தம் ஏற்படுத்தும் வெடிகளையாவது வெடிக்காமல் இருப்போம்.

மூன்று, பட்டாசுப் புகையில் உள்ள நச்சு (சல்பர், பாஸ்பரஸ் .. சார்ந்த) வாயுப்பொருட்கள், காற்றில் suspended particles ஆக மிதந்து, அக்காற்றை நாம் சுவாசிப்பதால், நுரையீரலுக்கும், மூச்சுக் குழாய்க்கும் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழி வகுக்கிறது. அந்த நச்சுப் புகையால், கண்களுக்கும், தோலுக்கும் கூட கெடுதல் விளைகிறது.

3. அந்த ஒரு நாளில் மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசை கொளுத்தி/வெடித்து கரியாக்குகிறோம். இப்படி ஒவ்வொருவரும் கரியாக்கும் பணத்தை அநாதை இல்லங்களுக்கோ, தர்ம ஸ்தாபனங்களுக்கோ வழங்கினால் கொஞ்சம் மன நிம்மதியாவது பதிலுக்கு பெற இயலும்!

4. சுற்றுச்சூழலுக்கு பட்டாசின் நச்சுப்புகையால் எத்தகைய மாசு ஏற்படுகிறது என்பதை சொல்லி மாளாது. தீபாவளியை வெடி வைக்காமல் கொண்டாட முடியாது என்ற பட்சத்தில், அதற்கு ஒரு மாதம் முன்பாகவே, நாம் நமது இரு/நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை தீபாவளி வரை தவிர்த்து, அதனால் சுற்றுச்சூழலுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்து, பின் தீபாவளி அன்று "போனஸாக" கொஞ்சம் பட்டாசு கொளுத்தி மகிழலாம் :)

5. நகரமெங்கும் வெடிக்காமல், ஒரு சில நிர்ணயிக்கப்பட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிக்கலாம். இப்போதெல்லாம் பலர், தீபாவளி அன்று நகரங்களின் பட்டாசு இரைச்சல் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க, அமைதியான இடங்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

6. நமது சிவகாசிப் பட்டாசுகள் போதாதென்று, தற்போது சீனப் பட்டாசுகள் சந்தைக்கு வருகின்றன. இவை நம் பட்டாசுகளை விட (நம்மையும், சுற்றுச்சூழலையும்) அதிகம் பாதிக்கின்றன. ஆனால், இந்த சீன ஃபேன்ஸி வகைப் பட்டாசுகளுக்கு சந்தையில் நல்ல மவுசு உள்ளது.

நாமாக, பிரச்சினையை உணர்ந்து திருந்துவதில்லை, சட்டம் போட்டாலும் அதை மதிப்பதில்லை :(
நமது சந்ததிகளுக்கு என்ன மாதிரி (வாழ்வதற்கு மிகக் கடினமான) ஒரு பூமியை விட்டுச் செல்ல இருக்கிறோம் என்பதை நம்மில் பலர் சிந்திப்பதில்லை என்பது தான் மிக்க வேதனைக்குரியது.

Anyway, நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 369 ***

Friday, October 26, 2007

368. ஞாநியும் பூணூலும் - கி.அ.அ.அனானி

இந்த மேட்டர் கி.அ.அ.அ விடமிருந்து நேற்று வந்தது. பதிப்பிக்கக் காரணம் .... கருத்துச் சுதந்திரம் தான் ! கி.அ.அ.அ பதிவுகளுக்கு விதவிதமாக டிஸ்கி எழுதி எழுதி அலுத்து விட்டதால், இதற்கு NO Disclaimer! எப்போதும் போல கி.அ.அ.அனானி பின்னூட்ட களத்தில் நின்று விளையாடுவார் (Stand and Play) !

Please read: http://govikannan.blogspot.com/2007/10/blog-post_25.html

எ.அ.பாலா

***********************************
அடைப்புக்குள் இருப்பவை மேல் சொன்ன பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கள்.

/////

ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயமா ? என்பது கேள்வி எழுப்பியவர்களும், ஞானியும், ஞானியின் வாசகர்கள் மட்டுமே தீர்மாணிக்க முடியும்.
ஆனால் ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயம் இல்லை என்பதை தேவையே இல்லாமல் பார்பனர்கள் வந்து கொடிபிடிப்பது நகைப்புக்கு இடமாக இருக்கிறது.

//////

கோவி கண்ணனின் திரிப்பு இங்குதான் ஆரம்பமாகிறது.ஞானியின் எழுத்துக்களில் பார்ப்பனீயம் இல்லை என எந்த பார்ப்பனர் இவரிடம் கொடி பிடித்தார்களோ தெரியாது.ஆனால் ஞானி பார்ப்பனர் அதனால் இப்படி எழுதினார் என்ற இவர்களது "ஞானிக்கு பூணுல் அணிவித்து அதன் மூலம் பார்ப்பனரை ஒட்டு மொத்தமாக கொச்சைப் படுத்தும் முயற்சிதான் எதிர்க்கப் படுகிறது" என்றே நான் நினைக்கிறேன்.இன்னும் சொல்லப் போனால் அந்தக் கட்டுரையைப் படித்து முதலில் ஆர்ப்பாட்டம் பண்ணி அலறித் துடித்து அவரது சட்டைக்குள் பூணுல் தேடியவர்கள்தான் உண்டே ஒழிய ஆஹா ஞானி சரியாக எழுதி விட்டார் என்று எந்தப் பார்பனரும் கொடி பிடித்ததாக எனக்குத் தெரியவில்லை.

இதில் வெளிப்படும் பாசிச தொனி தெளிவாகவே இருக்கிறது ... இந்த விஷயத்தில் பார்ப்பனர் யாரும் கேள்வி கேட்கக் கூடாது, அதோடு "பார்ப்பனர்கள்" யாரும் ஞாநியின் வாசகர்களாக இருக்கவே முடியாது என்ற கோணல் பார்வையும் வெளிப்பட்டிருப்பதும் நன்மையே, கோவியின் நோக்கம் இதில் பல் இளிக்கிறது. இதே பதிவில் சாதியை துறக்க நினைப்பவர்களை எண்ணி கோவி பெரிதாக அங்கலாய்த்து விம்மியிருப்பது நல்ல நகை முரண்.


//////ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் ? //////

யாருக்கும் ஞானி மீது பாசம் பொத்துக் கொண்டு வந்ததாக தெரியவில்லை.ஏற்பில்லாத கருத்தை சொல்பவனிடம் தூண்டித் துருவிப் பார்த்து அவன் பார்ப்பனன் என்று எதன் மூலமாகவேனும் பார்ப்பனர்கள்தான் அனைத்துக்கும் காரணம் என காட்டி அதன் மூலம் ஆதாயம் தேட முயலும் மூர்க்கத்தனம்தான் கண்டிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

/////////தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் ? இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ ?' என்ற பதில் தான்கிடைக்கிறது.////////

காமாலைக் கண்ணுக்கு அப்படிப்பட்ட பதில்தான் கிடைக்கும்..ஏனெனில் ஞானி பார்ப்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என வரிந்து கட்டிய அனைவரும் பார்ப்பனர் மட்டும்தானா? என யோசிப்பதை வசதியாக மறந்து விட்டு தயார் செய்த பதிலுக்கு கேள்வி தேடினால் அது இப்படித்தானே இருக்க முடியும்? அப்படியானால் மருதையனை பார்ப்பனர் என்று தூற்றிக் கொண்டு அலைந்ததே இதே கூட்டம் அப்போது யாரானும் பார்ப்பனர் வந்து ஐயோ ,பார்பனரை தூற்றுகிறானே என்று மருதையனுக்கு பரிந்து வந்து வரிந்து கட்டி கொடி பிடித்தார்களா என்ன என்ற கேள்விக்கு கோவி கண்ணனிடம் உண்மையான பதில் இருக்காது.

/////"ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே ? பார்பனர்கள் பொறுக்க முடியாமல் கருத்து சொல்கிறார்கள்."/////

கோவி கண்ணனும் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டத்தான் இவ்வாறு கருத்து சொல்கிறார் என்று அடுத்தவரும் கூறலாமல்லவா?.

///////கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது/////

இப்படி சொல்லும் கோவி கண்ணனுக்கு சொல்வதெல்லாம் இது கவலைக்குரியது மட்டுமல்ல கயமைத்தனமும் கூட.இந்தக் கயமைத்தனம்தான் ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது.""... ஞானிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் பார்பனர்களும் சரி "" என்று எள்ளுவதன் மூலம் ஆதரவளித்தவர் அனைவரும் பார்ப்பனர் என்று நேரடியாகச் சொல்லாமல் (அதுவும் ஞானிக்கு ஆதரவா அல்லது அவர் சொன்ன கருத்துக்கு ஆதரவா அல்லது அவரது கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு தெரிவித்தார்களா என்றும் சொல்லாமல்.) "ஆதரவளித்த" என்று பொத்தம் பொதுவாக சொல்லி பூணுல் அணிவித்து தூற்ற முயலும் இந்த அறிவுஜீவித்தனமான உத்தியும் உச்சகட்ட கயமைதான்.

கி.அ.அ.அனானி
***************************


*** 368 ***

Monday, October 22, 2007

கண்டனக் கூட்டம் எனும் கேலிக்கூத்து-By கி அ அ அனானி

கி.அ.அ.அ விடமிருந்து ஒரு மெயில் ... ஒரு "கண்டன மேட்டர்" அவருக்கே உரிய ஸ்டைலில் ! நான் ஞாநி எழுதியதையும் படிக்கவில்லை, இது குறித்து வலையில் வந்த பதிவுகளையும் பார்க்கவில்லை, அதனால் பிரச்சினை / கண்டனம் குறித்து தெளிவாகத் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் தற்சமயம் இல்லை! இருந்தாலும், கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் கி.அ.அ.அ மேட்டரை பதிப்பிக்கிறேன் (பதியாவிட்டால், கி.அ.அ.அ. என்னை பிரித்து மேய்ந்து விடுவார் என்று உள்ளூர பயமும் ஒரு காரணம் :)) இதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு எதிர்வினையாக நான் எந்த கருத்தும் தெரிவிப்பதாக இல்லை !!! கி.அ.அ.அனானி அவர்களே பின்னூட்ட களத்தில் நின்று விளையாடுவார் (Stand and Play) ;-)
எ.அ.பாலா
********************************************************

ஞாநி என்கின்ற அதி புத்திசாலி வயசாகிவிட்டதே...வாரிசுகள் முன்னுக்கு வந்து வயதானவருக்கு வயதுக்குறிய ஓய்வைத்தரட்டுமே என ஓ போட்டு விட்டாராம்?

ஆஹா...ஆரம்பித்து விட்டார்களையா? உன் சாதி அப்படி அதனால்தான் நீ இப்படி சொன்னாய் என்பதிலிருந்து ஆரம்பித்து மஹால் புக் பண்ணி கண்டனக் கூட்டம் போடுவது வரை நன்றியை நன்றாகவே காட்டுகிறார்கள்.

வாஜ்பாயைக் கேட்டாயா? அத்வனி மகள் பிரதீபாவை சொன்னாயா ? எம் ஜி ஆரை சொன்னாயா என கருத்தாழம் மிக்க கேள்விகளையும் அள்ளி வீசுகிறார்கள். ( அவர்களையெல்லாம் கேட்காததால் இதையும் கேட்கக் கூடாது அல்லது இது பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்பதெல்லாம் ஒரு லாஜிக்கா என்பது ஒரு புறம் இருக்கட்டும்...நான் கீழே கேட்பதற்கு முதலில் இவர்களது பதில் என்ன ?)

போன தடவை மக்கள் மாங்காய் மடையர்களாய் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பினார்களே..அப்போது தனியாளாக சட்ட சபைக்கு போக பயந்து போகாமலேயே உடம்பு சரியில்லை என்று உதார் விட்டுக் கொண்டிருந்த போது எங்கே போயிருந்தீர்கள் ? அப்போது போட வேண்டியதுதானே இந்தக் கண்டனக் கூட்டத்தை..தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ சட்டசபைக்குக் கட்டாயம் போகத்தான் வேண்டும் என்று.

அப்போது எங்கிருந்தீர்கள் ? குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு முறையேனும் சட்ட சபை போகவில்லையெனில் எம் எல் ஏ அந்தஸ்து பறி போய்விடும் என்பதற்காகா நாலு பேர் பிடித்துக் கொள்ள நடந்து போய் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு வாசலோடு திரும்பியவருக்கு ஆரத்தி எடுத்த கூட்டத்தில் ஓ போட்டுக் கொண்டு இருந்தார்களா ?

நல்ல விதமாக கண்டனத்தை தெரிவித்தார்களாம்..பாராட்டி பதிவுகள் வேறு !!!!இதில் இதற்குமேல் சொல்ல ஒன்றும் இல்லை அதனால் இத்தோடு விட்டார்கள் இல்லையெனில் எந்த எல்லையையும் தொடாமலா விடுவோம் நாம் ?

நல்ல வேளை..இந்த முடிசூடா மன்னர் தமது பரப்பரைக்கு தனது பட்டத்தை தரலாமே என்றுதான் எழுதினார் ஞாநி...இல்லையென்றால் இத்தனை நேரம் ஞாநிக்கும் ஆனந்த விகடனுக்கும் மதுரை தினகரன் ஆபிஸில் ஏற்பட்ட கதிதான்.

இந்த மாதிரி கடைந்தெடுத்த ஜால்ராக்களுக்கெதிரான என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்


கி அ அ அனானி.

Sunday, September 30, 2007

World Chess Championship - வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்

மெக்ஸிகோவில் நடைபெற்று முடிந்த உலக செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில், 14 சுற்றுகளில் 9 புள்ளிகள் பெற்று, ஆனந்த் வெற்றி வாகை சூடினார். உலகின் டாப் 8 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட, மிக மிகக் கடினமான ஒரு களத்தில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது! சூழல் தரும் அழுத்தத்தை சிறப்பாக எதிர்கொண்டு, நிதானத்தையும் கவனத்தையும் (Patience and Concentration) தொடர்ந்து பல நாட்கள் தக்க வைத்துக் கொண்டு, ஆனந்த் இந்தப் பட்டத்தை வென்று உலக சேம்பியன் ஆகியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

இந்தியாவில் செஸ் நல்ல பிரபலம் அடைந்திருப்பதற்கும், தற்சமயம் பல இளம் இந்திய ஆட்டக்காரர்கள் உலக அலவில் ஆடவல்ல திறமையை பெற்றிருப்பதற்கும் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு சிறந்த முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் T-20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகப் பட்டத்தை வென்று விரைவில் தாயகம் திரும்பவுள்ள ஆனந்துக்கு எந்த விதமான வரவேற்பு அளிக்கப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! இதை நான் குறிப்பிடவில்லை, ஆனந்தே ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்!

அவருக்கு (உரிய) சிறப்பான வரவேற்பும், கௌரவமும் அளிக்கப்பட வேண்டும் என்பது என் போன்ற செஸ் ரசிகர்களின் அவா! Congratulations Anand, for this Superlative Achievement and bringing Laurels to Our Country!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 366 ***

குழந்தை லோகபிரியா நலமாய் - நன்றியுடன்

அன்பான நண்பர்களே,

டிசம்பர் 31 2006 அன்று குழந்தை லோகபிரியாவிற்கு இருதய அறுவை சிகிச்சைக்காக வந்த வேண்டுகோள் பற்றி இந்தப்பதிவுவாயிலாக வெளியிட்டிருந்தேன்

வலையுலகு மற்றும் மற்ற நண்பர்கள், ஆர்வலர்களது உதவியுடனும், நல்லாசிகளுடனும் குழந்தை லோகபிரியா இருதய அறுவை சிகிச்சை 24/01/2007 அன்று நல்ல படியாக நடந்து முடிந்தது பற்றி இந்தப் பதிவில் எழுதியிருந்தேன்.

நேற்று நண்பர் சங்கரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.அது அப்படியே உங்கள் பார்வைக்கு.

*****************************************************************************

அன்புள்ள பாலாஜி

நொம்ப நாட்களாக ஃபோனிலும், தெரிந்தவர் மூலமாகவும், இருதய அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை லோகப்பிரியா நலம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டிருந்தோமல்லவா.. அதன் தொடர்ச்சியாக

நேற்று குழந்தை லோகப்ரியாவை அழைத்துக் கொண்டு அவரது தாயார் என் வீட்டிற்கு வந்திருந்தார்.

"ஆபரேஷன் முடிந்து 8 மாதங்களாகி விட்டது. அவ்வப்போது குழந்தைகளுக்கே உண்டான சிறு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற சிறு சிறு உபாதைகள் தவிர குழந்தை நல்லபடியாக இருக்கிறாள்.ரெகுலராக ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு செக் அப்பிற்கு போய் வருவதாகவும் டாக்டர்கள் குழந்தை நார்மலாக இருக்கிறாள் , இனி ஒரு கவலையும் இல்லை. என்று தெரிவித்ததாகவும் சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.


குழந்தை 15.01.2007 அன்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியதாகவும், இப்போது அவளது தந்தை கவலையற்று தினம் வேலைக்கு செல்வதாகவும், தான் இன்னும் ஒரு 6 மாதம் பார்த்து விட்டு , பின் ஏதாவது வீட்டு வேலைக்கு போகலாம் என்று இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

லோகபிரியாவின் வாழ்வில் விளக்கெற்றி வைத்து தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி சொல்லும்படி கண்களில் நன்றி ததும்ப திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.


குழந்தை நல்ல துறு துறுப்பாக ஓடியாடி விளையாடுகிறது...ஆபரேஷன் மற்றும் மருந்து மாத்திரைகளால் கொஞ்சம் பூஞ்சையாக இருக்கிறது.ஆனால் நாளாவட்டத்தில் தேறி விடும் என்று நினைக்கிறேன்.


நண்பர்களுடன் சேர்ந்து செய்த ஒரு நன்முயற்சியின் வெற்றியும் பலனும் கண் முன்னே கண்ட போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் சார்பாகவும் , வலையுலக நண்பர்கள் சார்பாகவும் குழந்தைக்கு வாழ்த்து சொல்லி, பிறந்த நாள் பரிசும் கொடுத்தனுப்பினேன். இந்தச் சமயத்தில் உதவி செய்த நமது வலையுலக நண்பர்கள அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.


இதை நானே வலை பதியலாம் என்று நினைத்தேன்..ஆனால் உன் வலைப் பதிவில் போட்டால் தொடர்ச்சி இருக்கும் என்பதால் உனக்கு அனுப்பியுள்ளேன்.


Bala..a great job..well done..Thanks to one and all.

அன்புடன்...ச.சங்கர்


****************************************************************************

இதைப் பதிவதுடன் இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், குழந்தை லோகபிரியா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா


***365***

Wednesday, September 26, 2007

364. பிரமிக்க வைத்த உலகக்கோப்பை வெற்றி

இந்திய-பாக் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த T-20 இறுதிச்சுற்று போட்டி, அபாரமான, பல திடுக் தருணங்கள் நிறைந்த, பலமில்லா இதயங்கள் கொண்டவர்களுக்கு ஒவ்வாத ஒன்று என்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும் :)

டாஸில் வென்ற தோனி எப்போதும் போல் பேட் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்து 3 (இங்கிலாந்து, தெ.ஆ, ஆஸ்திரேலியா எதிராக) மகத்தான வெற்றிகளுக்கு தலைமை தாங்கிய மாவீரரின் முடிவை குறை சொல்ல நான் யார்? தோனி தனது திட்டம் 175-180 ரன்களை இலக்காக நிர்ணயிப்பது என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தான் (உமர் குல், தன்வீர், ஆசிப்) சிறப்பாக பந்து வீசினர். இந்திய பேட்டிங் சோபிக்கவில்லை. யுவராஜும், தோனியும் அதிக ரன்கள் எடுக்காவிட்டாலும், கௌதம் கம்பீர் மிகவும் பொறுப்புடன், அதே நேரத்தில் பிரமாதமான ஆட்டம் ஆடி 75 ரன்கள் (54 பந்துகள்) எடுத்தார். கம்பீர் எடுத்தது, இந்தியா எடுத்த மொத்த (157) ரன்களில், கிட்டத்தட்ட பாதி! இன்னிங்க்ஸின் இறுதியில் ரோஹித் எடுத்த 30 ரன்கள் (16 பந்துகள்) குறிப்பிடப்பட வேண்டியவை. ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக எதுவும் இல்லாததால், நாம் ஒரு 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாகத் தான் எனக்குத் தோன்றியது.

இம்ரான் நசீரும், ஹ·பீஸ¤ம் களமிரங்கினர். RP சிங்கின் முதல் ஒவரில் (வெளி செல்லும் பந்தைத் தொட்டு!) உத்தப்பாவிற்கு கேட்ச் கொடுத்து, ஹ·பீஸ் OUT! அடுத்த ஸ்ரீசாந்த் ஓவரில், எதிர்பார்த்தது போலவை, இம்ரான் வெறியாட்டம் ஆடியதில் 21 ரன்கள்! ஆனாலும் RPS நிதானம் இழக்காமல், மூன்றாவது ஓவரில் (இந்த முறை உள்ளே வந்த பந்து வாயிலாக!), அக்மலை Clean bowled செய்ததில் ஸ்கோர் 26-2. தனது முதல் ஓவரில் 21 ரன்கள் தந்த ஸ்ரீசாந்த், அடுத்து ஒரு maiden ஓவர் வீசியது மிக்க பாராட்டுக்குரியது.

ஆட்டத்தின் முக்கியமான turning point என்று நான் நினைக்கும் விஷயம் 6வது ஓவரில் நிகழ்ந்தது. அது உத்தப்பா செய்த (நசீர் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் நம்மிடமிருந்து கை நழுவிக் கொண்டிருந்த கட்டத்தில்) அற்புதமான (direct hit) ரன் அவுட்! அடுத்த 4 ஓவர்களில் பாகிஸ்தான் 17 ரன்கள் மட்டுமே எடுத்து, யூனுஸ் கானையும் இழந்ததில், நம் அணியினருக்கு நம்பிக்கை அதிகமாகி, பாகிஸ்தானுக்கு பிரஷர்!

இந்த கட்டத்தில், பதானும், ஜோகிந்தரும் திறமையாக பந்து வீசிக் கொண்டிருந்தனர். அடுத்த முக்கிய நிகழ்வுகள் பதானின் (12வது) ஓவரில் வீழ்ந்த 2 விக்கெட்டுகள்! தேவையான ரன் ரேட் கூடிக் கொண்டே (அப்போது 9.11) போவதைக் கண்டு, கேப்டன் ஷோயப் மாலிக் அடிக்கப் போய், ரோஹித்துக்கு சுலபமான கேட்ச் வழங்கி OUT ! 'அவசர அடி' (ஷாஹித்) அ·ப்ரிடி, தான் எதிர்நோக்கிய முதல் பந்தை mid-off திசையில் தூக்கி அடித்தார். அதிக உயரம் சென்ற பந்தை, அருமையாக ஜட்ஜ் செய்து, ஸ்ரீசாந்த் பிடித்தது ஒரு சூப்பர் கேட்ச்! இந்த கட்டத்தில், ஸ்கோர் 78/6, தேவையான ரன்ரேட் 10.00 (8 ஓவர்கள் பாக்கி). Definitely, India was in the Driver seat :)

அடுத்த 3.5 ஓவர்களில், மிஸ்பாவும், அரா·பட்டும் ஜோடி சேர்ந்து 26 ரன்கள் சேர்த்தனர். பதானின் கடைசி ஓவரில் (ஆட்டத்தின் 16வது ஓவரில்) அரா·பட் clean bowled. இர்·பான் பதான் பந்து வீச்சு 4-0-16-3

3 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்த நிலையில், பாகிஸ்தானிய வெற்றிக்கு 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை (பிரதி ஓவர் 13.5 ரன்கள்). இந்த நிலையில், இந்தியா சுலபமாக வென்றிருக்க வேண்டும்! ஆனால், ஹர்பஜன் வீசிய மிக மிக மோசமான 17வது ஓவரால் தான், ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது!

அது ஒரு விசேஷமான ஓவர், அரை ஓவர் maiden, மீதி அரை ஓவரில் மிஸ்பா 3 ஸிக்ஸர்கள் அடித்தார்! மிஸ்பா பிரமாதமாக ஆடினார் என்று கூறுவதை விட, அனுபவமிக்க ஹர்பஜன் பிரஷரில் மோசமாக பந்து வீசினார் என்றே கூறுவேன்! இப்போது 3 ஓவர்களில் 35 ரன்கள் என்ற நிலைமை. எனக்கோ சரியான கடுப்பு, டென்ஷன் :-(

அடுத்து, ஸ்ரீசாந்த் தன் பங்குக்கு, 18வது ஓவரில் 15 ரன்கள் தாரை வார்த்தார். Bat-ஐக் கூட சரியாகப் பிடிக்கத் தெரியாத தன்வீர், 2 ஸிக்ஸர்கள் அடித்தது, பெரிய கொடுமை! Cricket is a great leveller! ஆனால், அந்த ஓவரின் கடைசிப் பந்தில், ஸ்ரீசாந்த் தன்வீரை clean bowled செய்து, மீண்டும் என் நம்பிக்கையைத் துளிர்க்க வைத்தார்!

2 ஓவர்கள் - பாக் வெற்றிக்கு 20 ரன்கள்! போட்டியின் 19வது ஓவரை வீசிய RP சிங், அது தான் அவர் வாழ்க்கையில் வீசும் கடைசி ஓவர் என்று எண்ணச் செய்யும் அளவுக்கு, டென்ஷன் ஆகாமல், மிகத் திறமையாக, வைராக்கியத்துடன் பந்து வீசினார். இவ்விளைஞர் வெகு தூரம் செல்வார் என்பது என் நம்பிக்கை.

ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தந்து, ஐந்தாவதில் உமர் குல்லின் ஸ்டம்பை முறித்தார்! பாக் 141-9, இந்தியாவுக்கும், உலகக் கோப்பை வெற்றிக்கும் இடையே இருந்தது ஒரு பாகிஸ்தானிய விக்கெட் மட்டுமே!!! துரதிருஷ்டவசமாக ஓவரின் கடைசிப் பந்தில், edge வாயிலாக, ஆசிப்புக்கு பவுண்டரி கிட்டியதில், இறுதி ஓவரில் பாகிஸ்தானிய வெற்றி இலக்கு 13 ரன்கள்!

ஹர்பஜனா, ஜோகீந்தரா என்று யோசித்த தோனி, கடைசி ஓவரை வீச ஜோகீந்தரை அழைத்தார். அன்று ஞாலம் அளந்த பிரானையும், துங்கக் கரிமுகத்துத் தூமணியையும் நான் தியானிக்கத் தொடங்கினேன்! என்னளவில் உடலசைவு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன் (கிரிக்கெட் செண்டிமெண்ட் பா:))

மிஸ்பா தயார்! ஜோகீந்தரின் முதல் பந்து ஒரு பெரிய wide - 12 ரன்கள் தேவை - அடுத்த பந்தில் ரன் இல்லை - அடுத்த பந்து மிஸ்பா அடித்த அடியில் ஸிக்ஸருக்குப் பறந்தது! இப்போது 4 பந்துகளில் 6 ரன்கள் தேவை!

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் நடந்த ஷார்ஜா ஆட்டமும், மியதாத் சேத்தன் சர்மாவை அடித்த கடைசிப் பந்து ஸிக்ஸரும் என் ஞாபகத்தில் நிழலாடின! ஜோகீந்தர் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மூன்றாவது பந்தை ஒரு slow Fulltoss-ஆக வீசினார். அதை மிஸ்பா fine leg தலை மேல் தூக்கி அடிக்கு விதத்தில் ஆட முயற்சித்த ஷாட் சற்றே, "மிஸ், பா" ஆகி பந்து மட்டையில் சரியாகப் படாமல், உயரே பறந்தது!

ஸ்டேடியத்தின் இரைச்சலையும், சூழலின் அழுத்தத்தையும் மீறி, வரலாற்று சிறப்பு மிக்க அந்த காட்சை ஸ்ரீசாந்த் பிடித்தே விட்டார் :) T20 உலகக் கோப்பையை இளைய பாரத அணி வென்றே விட்டது!!! 24 ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு உலகக் கோப்பை!

சமீபத்தில் நடைபெற்ற (ஒரு நாள்) உலகக் கோப்பை போட்டிகளில், முதல் சுற்றிலேயே நாம் வெளியேறிய அவமானம் இந்த அற்புதமான வெற்றியால் துடைக்கப்பட்டு விட்டது! அது போலவே, மியதாத் அடித்த கடைசிப் பந்து ஸிக்ஸர் என்ற துர்சொப்பனம் இனிமேல் என்னைத் துரத்தாது :)

"நீவிர் இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்ற வைணவப் பாரம்பரிய வாழ்த்துக்களை, உலகக் கோப்பையை வென்ற இளைய பாரதத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் :)

சக் தியா இந்தியா !!!!!!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 364 ***

Sunday, September 23, 2007

362. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய பாரதத்தினாய் வா வா வா!

வலிமை மிக்க தோளினாய் வா வா வா! நாளை பாகிஸ்தானை வெல்லுவாய் வா வா வா!

நேற்று நடந்த இந்திய-ஆஸ்திரேலிய WC T-20 அரைஇறுதி ஆட்டத்தை வென்ற இந்திய அணியைப் பற்றி தான் சொல்கிறேன்! நேற்றும் டாஸில் வென்ற தோனி, வழக்கம் போல முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய வம்சாவழியினர் நிறைந்த டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியம் களை கட்டியிருந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பேரிரைச்சல் :)

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள், சேவாகுக்கு width தராமல் திறமையாக பந்து வீசினர். எனக்கு எப்போதும் போல லேசான டென்ஷன்:) சேவாக் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு, ரோஹித் அவருக்கு ரன்னராக களம் வந்தார். ஆட்டத்தின் டெம்போவை தொடக்கத்திலேயே பாதித்த இது தேவையில்லாத ஒன்று என்பது என் எண்ணம்! சேவாக் பேசாமல் retired hurt என்று களத்தை விட்டு சென்று, உத்தப்பா ஆட வந்திருக்க வேண்டும்.

சேவாகும், கம்பீரும் அவுட்டாகி வெளியேறியதில் ஸ்கோர் 41-2 (8 ஓவர்கள்). மட்டமான தொடக்கம் என்றே சொல்ல வேண்டும்! உத்தப்பாவும் தடவி தடவித் தான் ஆடிக் கொண்டிருந்தார். யுவராஜ் களமிறங்கியவுடன் ஆட்டம் சூடு பிடித்தது. கிளார்க் வீசிய பந்தை ஸிக்ஸர் அடித்தது வாயிலாக, ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்த ஆஸ்திரேலியர்கள் மனதில் சந்தேக விதைகளை விதைத்தார்!

இப்போது யுவராஜும், உத்தப்பாவும், நாங்கள் மெரினா கடற்கரையில் (சிறுவயதில்) ஆடிய 'Four and Sixer' ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆஸ்திரேலியப் பந்து வீச்சை சிதறடித்ததில் "நான்கு-ஆறு" மழை பொழிந்தது! 11வது ஓவரில் 19 ரன்கள், கிளார்க் வீசிய 14வது ஓவரில் நடந்த படுகொலையில் 21 ரன்கள், யுவராஜ் 21 பந்துகளில் அரைசதத்தை எட்டி விட்டார், ஸ்கோர் 125 (14.3 ஓவர்களில்) ! அதாவது, 6.3 ஓவர்களில் உத்தப்பா-யுவராஜ் ஜோடி ஈட்டியது 84 ரன்கள் (12.92 ரன்கள் பிரதி ஓவர்!!!)

சைமண்ட்ஸின் திறமையான ·பீல்டிங்கில் உத்தப்பா ரன் அவுட்! உத்தப்பா 34 ரன்கள் (3 ஸிக்ஸர்கள்). களமிறங்கிய தோனி தன் பங்குக்கு சைமண்ட்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்து, டெம்போவை நிலை நிறுத்தினார். தோனியின் ஆட்டத்தின் சிறப்பம்சம், அவரது மணிக்கட்டின் அபரிமிதமான வலிமை, அதனால், பந்து பவுண்டரி நோக்கி விரையும் வேகம்!

தனது வெறியாட்டத்தை யுவராஜ் முடித்துக் கொண்டபோது, அவர் எடுத்த ரன்கள் 70 (முப்பதே பந்துகளில், 5x4, 5x6), ஸ்கோர் 155-4 (17.3 ஓவர்கள்) ! இறுதியில் இந்தியா 188 ரன்கள் எடுத்து, தனது இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. தோனி 18 பந்துகளில் 36 ரன்கள். யுவராஜ் இறுதி வரை ஆடியிருந்தால், இன்னும் 20 ரன்கள் வந்திருக்கும்!

நமது பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினால், மேட்ச் இறுதி ஓவர் வரை செல்லும் என்று தான் எனக்குத் தோன்றியது. கில்கிரிஸ்ட்-ஹெய்டன் ஜோடி முதலில் தடுமாறினாலும் (ஸ்ரீசாந்த் மிகச் சிறப்பாக பந்து வீசினார்) 5 ஓவர்களில் 36 எடுத்த நிலையில், ஸ்ரீசாந்த் வீசிய ஆறாவது ஓவரின் முதல் பந்து கில்கிரிஸ்டின் ஸ்டம்பை சிதறடித்தது! அந்த ஓவர் முடிந்தபோது ஸ்ரீசாந்த் spell 3-1-6-1, அபாரமான பந்து வீச்சு!

ஹாட்ஜ் விக்கெட் இழந்தபோது ஸ்கோர் 68-2 (8.4 ஓவர்கள்). தேவையான ரன் ரேட் 10.7 ! ஆஸ்திரேலியாவால் இயலும் என்று தான் தோன்றியது. களமிறங்கிய சைமண்ட்ஸ், ஹெய்டனுடன் ஜோடி சேர்ந்து இந்திய பந்து வீச்சை கலகலக்க வைத்தார். சேவாக் ஒரு ஓவரில் 20 ரன்கள் கொடுத்தார்! ஆறு ஓவர்களில், ஜோடி சேர்ந்து அவர்கள் எடுத்தது 66 ரன்கள், ஸ்கோர் 134-2 (14.3 ஓவர்கள்). ஆஸ்திரேலியாவுக்கு 8 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், எனக்கு சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது! ஆனாலும் நம் அணியினர் நம்பிக்கையுடன் காணப்பட்டது ஆறுதலாக இருந்தது!

இடம் மாறினாலாவது விக்கெட் விழுகிறதா பார்க்கலாம் என்று நான் நாற்காலியிருந்து எழுந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன் :) ஸ்ரீசாந்தின் அந்த 15வது ஓவரின் நான்காவது பந்தில், ஹெய்டன் க்ளீன் போல்ட் !!! டர்பன் ரசிகர்களின் ஆரவாரம்! அந்த முக்கியமான கட்டத்தில், ஸ்ரீசாந்தை பந்து வீச அழைத்த தோனியை நிச்சயம் பாராட்ட வேண்டும்!

நமது அணியினரின் உடல் மொழியில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது! இந்த கட்டத்தில், பதானும், ஹர்பஜனும் நன்றாகவே பந்து வீசிக் கொண்டிருந்தனர். ஆட்டத்தின் 17-வது ஓவரில் பதானின் பந்து வீச்சில் சைமண்ட்ஸ் க்ளீன் போல்ட்! ஸ்கோர் 156-4 (16.4 ஓவர்கள்). தேவையான ரன் ரேட் 9.9. இன்னும் எனக்கு நம்பிக்கை இல்லை! ஏனெனில், ஆஸ்திரேலியர்கள் பிரஷரில் ஆடி, பல முறை வென்றவர்கள் அல்லவா ?

ஹர்பஜன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் (யார்க்கர்) கிளார்க் ஸ்டம்பை இழந்தார்! 159-5 ! அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, ரசிகர்களின் டென்ஷன் எகிறிக் கொண்டிருந்தது! RP சிங் வீசிய 19வது ஓவர், ஆஸ்திரேலியர்களையும் பிரஷர் பாதிக்கும் என்பதை உணர்த்தியது :) ஆட்டத்தின் கடைசி ஓவரில், ஆஸ்திரேலியாவுக்கு தேவை 22 ரன்கள். மிக மோசமாக பந்து வீசினாலொழிய, இந்தியா தோற்க வாய்ப்பே இல்லை!

ஸ்ரீசாந்த், RP சிங், பதான் என்று அனைவருமே தங்கள் ஓவர்களை முடித்து விட்ட நிலையில், 23 வயதான ஜோகிந்தர் பந்து வீசத் தயாரானார். மிக மிக சிறப்பாக பந்து வீசி, இரண்டு விக்கெட்டுகளையும் (மைக்கேல் ஹஸ்ஸி, லீ) வீழ்த்தி, அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தந்ததில், இந்தியா 15 ரன்களில், வலிமை மிக்க ஆஸ்திரேலிய அணியை வென்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது :)

இந்திய-பாக் அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில், Law of Averages நம்மைத் தீண்டி விடுமோ என்ற அச்சம் இருப்பினும், இந்த உலகக் கோப்பையில் (வென்றே ஆக வேண்டிய சூழலில்!) 3 பெரு வெற்றிகளை ஈட்டி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இவ்விளைய பாரதத்தினரை அவ்வளவு சுலபமாக யாரும் வெற்றிக் கொள்ள இயலாது என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது!

Come Home with the T20 World Cup, Team India ! We have confidence in your fearless attitude and abilities :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 362 ***

361. எங்கே கடவுள் ? - கி அ அ அனானி

கி அ அ அனானியிடமிருந்து மற்றும் ஒரு இடுகை

உங்கள் பார்வைக்கு...

எ அ பாலா
**************************************************************

ஆபரேசன் தியேட்டரை விட்டு வெலியே வந்த டாக்டரைப் பார்த்துக் கேட்டாள் " டாக்டர் ...என் பையன் எப்படி இருக்கிறான்?பூரணமாக குணமாகி விடுவான் இல்லையா? இப்போது நான் அவனைப் பார்க்கலாமா"

"சாரிம்மா..நாங்கள் எவ்வளவோ முயன்றும்.." டாக்டர் மீதியை சொல்லாமலே உதட்டைக் கடித்து அவளது தோளை ஆதரவாக தட்டினார்.

அவளுக்கு உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்தது.." டாக்டர்..டாக்டர்...என் குழந்தைக்கு ஏன் இது மாதிரி...குழந்தைகளுக்கு ஏன் இது போல் புற்றுநோய்?"கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மளுக்கென்று கரையுடைத்தது.

மனம் அரற்றியது " கடவுளே..கடவுளே..கை விட்டு விட்டாயே? எங்கே இருந்தாய்? என் மகனுக்கு மிகவும் தேவையான போது ஏன் வரவில்லை?".துக்கம் கேவலாக வெளி வந்தது

டாக்டர் "உள்ளே போய் மகனைப் பார்க்கிறீர்களா?மே பீ அவனுடன் சிறிது நேரம் தனியாக இருக்க ஆசைப்படுவீர்கள்.உள்ளே ஒரு நர்ஸ் இருக்கிறார்.அவர் வந்ததும் நீங்கள் உள்ளே போகலாம்..அப்புறம் சிறிது நேரத்தில் அவனது உடலை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எடுத்துப் போய் விடுவார்கள்"ஆதரவாக தோளைத் தட்டி விட்டு தலை குனிந்தவாறு நடந்தார்.

தட்டுத் தடுமாறி மகனை வைத்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.வெளிச்செல்ல முயன்ற நர்ஸை கையைப் பிடித்து நிறுத்தினாள்.சோகத்தில் தள்ளாடியவளை நர்ஸ் ஆதரவுடன் பிடித்துக் கொண்டு மகனை கிடத்தியிருந்த படுக்கையின் அருகில் அழைத்துச் சென்றாள்.மகனைப் பார்க்கும் போது உலகத்தின் மொத்த சோகமும் பந்தாகத் திரண்டு வந்து நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.மெதுவாக மகனுடைய கற்றையான தலை முடியை மெல்ல வருடினாள்.அழுத்தினால் வலித்து விடுமோ என்பது போல மெதுவாக கோதியபடி இருந்தாள்.

"வேணுமானால் ஒரு கற்றை முடியை எடுத்துத் தரவா அம்மா...மகனின் ஞாபகார்த்தமாக" மெல்லிய குரலில் நர்ஸ் கேட்டாள்

"சரி" என்றவளிடம் நர்ஸ் ஒரு கற்றை முடியை மெதுவாக வெட்டி ப்ளாஸ்டிக் பையிலிட்டு கொடுத்தாள்.

அதை வாங்கும் போது அந்தத் தாய் " இவன்தான் தன்னுடைய உடம்பை மருத்துவக் கல்லூரிக்கு தானமளிக்க வேண்டும் என பிடிவாதமாக சொன்னான்.நான் முதலில் மறுத்தேன்.ஆனால் அவனோ விடாப்பிடியாக ..அம்மா நான் இறந்த பிறகு இந்த உடம்பை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்? ஒரு வேளை இது வேறு யாராவது ஒரு சிறுவன் தன் தாயுடன் மேலும் சில காலம் இருக்க உதவலாமே" என்ற போது என்னால் மறுக்க முடியவில்லை" என்றாள்." இவன் மனசு பூராவும் தங்கம்...எந்த நேரத்திலும் அடுத்தவர் பற்றி நினைப்புதான்.அடுத்தவருக்கு உதவுவது பற்றிதான் சதா சர்வ காலமும் சிந்தனை"

" கடவுளே..கடவுளே..இப்படிப் பட்ட நல்ல குழந்தையை கை விட்டு விட்டாயே? எங்கே இருந்தாய்? என் மகனுக்கு மிகவும் தேவையான போது ஏன் வரவில்லை?" மீண்டும் மனது அரற்றியது.

மெதுவாக அந்தக் குழந்தைகள் மருத்துவமனை விட்டு வெளியே வந்தவள், கடந்த ஆறு மாதங்களாக அவளுக்கும் அவள் மகனுக்கும் வீடாகவே மாறி விட்ட ஆஸ்பத்திரியை கடைசி முறையாக திரும்பப் பார்த்தாள்.

ஆஸ்பத்திரியில் தந்த மகனது உடமைகளையும், தலை முடி அடங்கிய பையையும் காரில் தன் பக்கத்தில் வைத்தாள்.வீட்டை அடைந்த போது ஒரு யுகமே கழிந்தது போல் இருந்தது. மகனில்லாத வீட்டின் வெறுமை அவளை முகத்தில் அறைந்தது.மெதுவே கையில் மகனுடைய உடமைகளுடன் அவனது அறைக்குள் நுழைந்தாள். அவனது விளையாட்டு பொருட்கள்,மாடல் கார் அனைத்தையும் அவன் வைக்கும் அந்தந்த இடங்களில் வைத்தாள்.

அவனது படுக்கையில் சரிந்து அவன் தலையணையை அவனே போல் நினைத்து அணைத்த படி அடைத்து வைத்திருந்த துக்கமெல்லாம் பொங்கி வர நெஞ்சே வெடித்து விடும் போல் அழுதாள்.அழுதழுது எப்போது தூங்கினோம் என்று தெரியாமலே தூங்கிவிட்டாள்.

கிட்டத்தட்ட ஏதோ குளிர் காற்று உடலை வருடுவது போல் ஒரு சிலிர்ப்பு தோன்ற படக்கென விழிப்பு வந்தது.அப்போது படுக்கையில் அவளருகே நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதம் மெல்லிய காற்றில் பட படத்துக் கொண்டிருந்தது.

எடுத்துப் படிக்கலானாள்

" அன்புள்ள அம்மா,

என்னை இழந்து மிகவும் தவிப்பாய் என்று தெரியும்.நான் உன் அருகில் இல்லாததால் உன்னை மறந்து விடுவேன் என்றோ உன்னிடம் அன்பு செலுத்துவதை நிறுத்தி விடுவேன் என்றோ ஒரு போதும் நினைக்காதே.நான் எப்போதும் உன்னிடம் அன்பு செலுத்திய வண்ணமே இருப்பேன் .நாட்கள் செல்லச் செல்ல உன் மீது அன்பு கூடுமே தவிர குறையாது.வாழ்வின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவதொரு கணத்தில் நாம் மறுபடி சந்திப்போம்.அது வரை...பொருத்திரு..வேண்டுமெனில் அன்பு செலுத்த ஒரு பிள்ளையை தத்தெடுத்துக் கொள்.நீ தனிமைத் துயரிலிருந்தும் மீளலாம்.என்னுடைய இடத்தில் நீ வேறு ஒருவனை மகனாக வரிந்து அன்பு காட்டுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.மாறாக எனக்கு மிகவும் மகிழ்சியே.நீ அவனுக்கு என்னுடைய அறையையே கொடுக்கலாம்.என்னுடைய பரிசுப் பொருட்கள் விளையாட்டு சாமான்கள் , சைக்கிள், உடைகள் அத்தனையும் தரலாம்.ஆனால் நீ ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தால்..ஒரு வேளை அவளுக்கு பையன்களாகிய நாங்கள் உபயோகிக்கும் விளையாட்டு பொருட்கள் போன்றவை பிடிக்காமல் போகலாம்..ஏனெனில் பெண்ணல்லவா.அப்படிப்பட்ட பட்சத்தில் அவளுக்கு நீ அனைத்தும் புதிதாக வாங்கிக் கொடு...பொம்மைகள் முதற்கொண்டு..சரியா?

அப்புறம் என்னைப் பற்றியே நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்காதே.நான் இப்போது இருக்கும் இடம் மிக நன்றாக இருக்கிறது.தாத்தா பாட்டி அனைவரையும் பார்த்தேன்.அவர்கள் எனக்கு இங்கு சில இடங்களை சுற்றிக் காட்டினார்கள்.ஆனாலும் பார்க்க நிறைய இடம் இருக்கிறது..அம்மா இது மிகப் பரந்த இடம்.முழுவதும் பார்க்க நிறைய நேரமாகும்.இந்த இடத்தில் அங்கும் இங்குமாக பறக்கும் தேவதைகள் மிகவும் அழகாய் இருக்கிறார்கள்.

அம்மா !ஒன்று தெரியுமா? கடவுள் நாம் பார்க்கும் எந்தப் படத்தினைப் போலவோ அல்லது நாம் நினைப்பது போலவோ இல்லவே இல்லை.ஆனாலும் அவரைப் பார்த்த கணத்தில் "அவர்தான் கடவுள்" என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.நான் ரொம்ப முக்கியமானவன் போல என்னைத் தன்னருகே அழைத்து அமர்த்திக் கொண்டார்.அவரருகில் அமர்ந்து பேசும் போதுதான், உன்னை கடைசியாய் பார்க்க முடியாமல் போனதால் விடை பெறவாவது உனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற என்னுடைய ஆசையை அவரிடம் சொன்னேன்.நடக்கக் கூடிய காரியமல்ல என்று அறிந்தே ஒரு தாபத்தில் அவரிடம் கேட்டேன்..என்ன ஆச்சரியம்..சில தாள்களைக் கையில் கொடுத்து தான் உபயோகிக்கும் எழுது கோலையே என்னிடம் கொடுத்து எழுதச் சொன்னார்.அனேகமாக வசந்தத்தின் தேவதையைத்தான் இந்தக் கடிதத்தை உன்னிடம் கொண்டு சேர்க்க அனுப்புவார் என்று நினைக்கிறேன். அம்மா...ஒரு விஷயம்..நீ கேட்ட ஒரு கேள்விக்கும் பதிலை உனக்கு மறக்காமல் எழுதச்சொல்லி என்னிடம் சொன்னார். நீ அவரைக் கேட்டாயாமே "" கடவுளே..கடவுளே..இப்படிப் பட்ட நல்ல குழந்தையை கை விட்டு விட்டாயே? எங்கே இருந்தாய்? என் மகனுக்கு மிகவும் தேவையான போது ஏன் வரவில்லை?" என்று.

கடவுள் சொன்னார் " என் புதல்வனை சிலுவையில் அறையும் போது எங்கிருந்தேனோ அங்கேதான் இருந்தேன்" என்று.ஆம்.அவர் எப்போதும் போல் உலகின் எல்லாக் குழந்தைகளுக்கும் அருகில்தான் இருந்தாராம்."அப்புறம் இந்தக் கடிதத்தை நீ மட்டும்தான் படிக்க முடியும்.மற்றவருக்கு இது வெற்றுத் தாளாகத்தான் தெரியும் . சரியம்மா..கடவுளிடம் எழுதுகோலை திரும்பத் தர வேண்டும்.வாழ்க்கைப் புத்தகத்தில் இன்னும் சில புது அத்தியாயங்களை அவர் எழுத வேண்டுமாம். அடடா சொல்ல மறந்தே போனேனே..இப்போதெல்லாம் எனக்கு வலியே இல்லை.எனது புற்று நோயெல்லாம் போயே போய் விட்டது.எனக்கு இப்போதுதான் மிக மிக சந்தோஷம்.ஏனென்றால் நோயினால் எனக்கிருந்த அந்த வேதனையையும் வலியையும் என்னால் தாங்கவே முடியவில்லை.தன் குழந்தையாகிய நான் வேதனைப் படுவதை பார்த்திருந்த கடவுளாலும் பொறுக்க முடியவில்லையாம்..அந்தக் கணத்தில்தான் அவர் கருணை தேவதையை அனுப்பி என்னை தன்னிடம் கூட்டி வரும்படி சொல்லிவிட்டாராம். போகும் வழியில் கருணை தேவதை சொல்லிற்று" இப்படி எப்போதாவதுதான் நடக்கும்...நீ கடவுளுக்கு மிக நெருக்கமானவன்" என்று.
அம்மா இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?
அன்புடன்
(கையொப்பம்)
உன் மகன் மற்றும் கடவுள்

பின் குறிப்பு

சிலுவயில் அறையப்பட்ட போது ஏசு சொன்னதாக சொல்லப்படும் ஹீப்ரூ வரிகள்."ஏலி..ஏலி லாமா சபக்தனி"(கடவுளே.. கடவுளே நீங்களுமா என்னைக் கை விட்டீர்)

Quote
" உன்னால் ஒன்றும் செய்ய முடியாது போகும் போது கடவுள் உனக்காக நிச்சயம் ஏதாவது செய்கிறார் "

கி அ அ அனானி.

*************************************************************************************
*361*

360. விரும்பத் தக்கவரா இராமர் ?

ராமர் இஞ்சினியரிங் படித்திராவிட்டாலும், அவர் ராமர் சேது கட்டியிருக்காவிட்டாலும், அவர் சோமபானம் அருந்தியிருந்தாலும் (அவர் அருந்தவில்லை என்பது வேறு விஷயம்! சுக்ரீவன் அடிக்கடி சோமபானம் அருந்தி வந்ததை அவர் கடிந்திருக்கிறார் என்று தான் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது!) அவரை விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன அல்லவா ?

1. இராமர் ஏகபத்தினி விரதர்!

2. தந்தை தந்த வரத்திற்காக, விருப்பத்துடன் மணிமுடியைத் துறந்து வனவாழ்வை மேற்கொண்டவர், அதாவது 'நாற்காலி' ஆசை துளியும் அற்றவர்!

3. சாமானியர்கள் (குகன், சபரி, அகலிகை, சுக்ரீவன் ...) பேரில் உண்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாமனிதர்.

4. தனக்காக உயிரையும் தரவல்ல நட்பையும், சுற்றத்தையும் (ஜடாயு, அனுமன், இலக்குவன், பரதன் ...) தனது மேன்மையால் கிடைக்கப் பெற்றவர்.

5. (கொழுக்கட்டையோ கூழோ என்ற பேதம் பார்க்காமல்) குகன் தந்த மீனையும், தேனையும் ஒன்றாக பாவித்து ஏற்றுக் கொண்டவர்!

6. தன் மனைவியை அபகரித்த எதிரி போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கையில், "இன்று போய் நாளை வா" என்று பெருந்தன்மையோடு கூறிய நல்ல மனிதர்.

7. லவன், குசன் என்ற உலகம் வியந்த மைந்தர்களின் தந்தை!

8. வெற்றுப்பேச்சு பேசி பொழுதைக் கழிக்காமல், தன் செயல்களால் (ராம ராஜ்யம் அமைத்து!) தன் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு வித்திட்டவர்.

9. தன் குடும்பத்தினரையும், பொதுமக்களையும் ஒன்று போல் பாவித்தவர்!

10. பொய்யுரைக்காதவர், சந்தர்ப்பவாதம் அறியாதவர். நேர்மையாளராக வாழ்ந்து இன்றும் மக்களின் மனதில் அவதார நாயகனாக வாழ்பவர்!

11. தன்னை வெறுத்த சிற்றன்னை மீதும் அன்பு செலுத்தி, அரவணைத்துக் கொண்டவர்.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம் தான்! புரிந்தவர்களுக்கு நிச்சயம் புரியும், புரியாதவர்களுக்கு (புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு!) என்ன சொல்லியும் புரியப் போவதில்லை! அதனால், யாருக்கும் எந்த நட்டமும் இல்லை :)

*** 360 ***

359. 'அகிம்சை' குறித்து கி.அ.அ.அனானி !

திடீரென்று நண்பர் கி.அ.அ.அனானி, அகிம்சை பற்றி ஒரு மேட்டர் எழுதி மெயிலில் அனுப்பியிருந்தார் (அவர் காந்தியின் ரசிகர் என்ற விஷயம் இப்போது தான் தெரிய வந்தது ;-)) கி.அ.அ.அ எழுதி நான் பதிப்பித்ததில், என் மனதைத் தொட்ட மேட்டர் இது தான் ! மேட்டர் பதிவாக கீழே.

எ.அ.பாலா
***************************
எனக்கு அப்போது 16 வயது. எனது பெற்றோருடன் தென் ஆப்ரிக்கா, டர்பன் நகருக்கு வெளியே 18 மைல் தொலைவில் கரும்புத் தோட்டங்களுக்கு நடுவில் வசித்து வந்தோம்.நாங்கள் இருந்த இடம் நகருக்கு வெகுதொலைவிலும் அக்கம் பக்கம் யாரும் இல்லாமல் தனித்தும் இருந்ததால், நானும் என் இரு சகோதரிகளும் , எப்போதாவது கிடைக்கும் நகரத்திற்கு போகும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். நகரப் பரபரப்பில் நண்பர்களுடன் மற்றும் திரையரங்குகளில் மகிழ்ச்சியாக சில மணிகளைக் கழிக்கலாம் என்று.

ஒரு நாள் என் தந்தையார் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள நகரத்திற்கு கிளம்பிய போது அவருக்கு கார் ஓட்டியாக வரும்படி என்னைப் பணித்தார்.அது நாள் முழுவதும் நடக்கக் கூடிய கருத்தரங்கம்.நான் அளவு கடந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்.ஒரு நாள் முழுவதும் டவுனில்..நண்பர்களுடன் ...என மகிழ்சிக்கு அளவே இல்லை. என் தாயார் நகரிலிருந்து வாங்கி வர வேண்டிய மளிகைச் சாமான்களின் பட்டியலை கொடுத்தார்.தந்தையார் காரை சர்வீஸுக்கு விடுவது உட்பட மேலும் முடிக்க வேண்டிய சில சிறு சிறு அலுவல்களையும் சொன்னார்.

தந்தையாரை கருத்தரங்கில் விட்ட போது " மாலை இதே இடத்தில் 5.00 மணிக்கு சந்திக்கலாம்.வீட்டிற்கு சேர்ந்தே திரும்பச் செல்லலாம் " எனக் கூறினார்

எனக்கு பெற்றோர் தந்த வேலைகளை அவசரமாக முடித்துக் கொண்டு, நேராக பக்கத்திலிருந்த சினிமா தியேட்டருக்குள் நுழைந்தேன். படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை.கடிகாரத்தைப் பார்த்தால் மணி 5.30. அவசர அவசராம காராஜுக்கு சென்று காரை பெற்றுக் கொண்டு ,தந்தையார் குறிப்பிட்டிருந்த இடத்தை அடைந்த போது மணி 6.00

தந்தையார் சற்றே கவலை தோய்ந்த முகத்துடன் " ஏன் லேட்" என்று கேட்டார். சினிமா பார்த்துக் கொண்டு உட்கார்ந்ததில் நேரம் போனது தெரியவில்லை என சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு" கார் சர்வீஸ் செய்ய நேரமாகி விட்டது" என பொய் சொன்னேன்.அதைச் சொன்ன மறுகணமே எனது மடத்தனத்தை உணர்ந்தேன். தந்தையார் ஏற்கனவே காராஜில் போன் செய்து கேட்டிருப்பார் . என் பொய் ஒரே நிமிடத்தில் சாயம் வெளுத்தது.நான் அச்சத்துடன் தந்தையாரை ஏறிட்டேன்.அவர் என்னைப் பார்த்து பின்வருமாரு சொன்னார் " நான் உன்னை வளர்த்த விதத்தில் ஏதோ குறை இருக்கிறது.அதுதான் என்னிடம் உண்மையை தைரியமாகச் சொல்லும் தன்னம்பிக்கையை உனக்கு தரவில்லை.நான் உன்னை வளர்ப்பதில் எங்கு தவறிழைத்தேன் என்பதைப் பற்றி சிந்தித்து என்னை திருத்திக் கொள்வதற்காக...நான் வீடுவரை உள்ள 18 மைல்களும் இதைப் பற்றி யோசித்தவாரே நடக்கப் போகிறேன்"

இவ்வாறாக கூறியதுடன் நில்லாது , கோட்டு சூட்டுடன், கரடு முரடான கிராமத்து இருட்டு சாலையில் நடக்க ஆரம்பித்தார்.என்னால் அவரை விட்டு சொல்லவும் முடியவில்லை.எனவே அடுத்த ஐந்தரை மணி நேரம், நான் சொன்ன ஒரு சிறு முட்டாள்தனமான பொய்யால் தந்தையார் படும் மன வேதனையும், கரடு முரடான நீண்ட சாலையில் நடந்து என்னால் அவர் படும் உடல் வேதனையும் பார்த்துப் பார்த்து நொந்து கொண்டே அவரது பின்னாலேயே காரை மெதுவாக செலுத்திக் கொண்டே சென்றேன்.அந்தக் கணத்தில் நான் முடிவெடுத்தேன் " வாழ்க்கையில் நான் எப்போதும் பொய் சொல்லக் கூடாதென்று"

பின்னாளில் நான் இதைப் பற்றி பலமுறை சிந்திதது ஆச்சரியப் பட்டதுண்டு.அன்று எனது தந்தையார் என்னை சாதரணமாக கடிந்து கொண்டோ,திட்டியோ ,ஏன் அடித்தோ போன்ற நாம் நமது குழந்தைகளிடம் பின்பற்றும் ஏதாவது ஒரு முறையில் தண்டித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று. நான் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாமல் கற்ற அந்தப் பாடத்தை கற்றிருப்பேனா? கண்டிப்பாக மாட்டேன். நானும் அவர் தந்த தண்டனையை ஏற்று, மறந்து, மறுபடியும் அதே தவறை மீண்டும் செய்திருப்பேன். ஆனால் அஹிம்சை வழியில் என் தந்தை செய்த செயலானது, இன்னும் இச்சம்பவம் நேற்றுதான் நடந்தது போல் என் நினைவில் பசுமையாய்ப் பதிந்து ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதுதான் அஹிம்சையின் சக்தி"
*******************************************************************************
"மஹாத்மா காந்தியின் பேரனும்,காந்தி அஹிம்சா பல்கலைக் கழக நிருவனருமான டாக்டர்.அருண் காந்தி , போர்டோ ரிகோ பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையின் போது , அஹிம்சை வழியில் பிள்ளை வளர்ப்பு பற்றி உதாரணமாக குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை சம்பவம் இது."

கி அ அ அனானியின் குறிப்பு கீழே

இப்படிப்பட்ட "அஹிம்சை" என்ற சக்தி மிகுந்த ஆயுதத்தை ஒரு தேசத்தினையே விடுதலை அடையச் செய்ய உபயோகிக்க முடியும் என்று சொல்லி அவ்வழியில் நின்றதோடல்லாமல், மக்களை வழி நடத்தி , சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்து நிரூபித்த அந்த மஹான், அண்ணல் , மஹாத்மா காந்தியடிகள் பற்றி அங்கங்கு கேட்டது படித்தது வைத்தெல்லாம் கண்ட படி ஏதோ வாய்க்கு வந்தபடி பேசுவது அல்லது எழுதுவதெல்லாம் குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்துச் சொன்னது போலத்தான்.

முடிக்கும் முன்

2000 -ஆம் ஆண்டு பி பி சி செய்திகள் வலைத்தளத்தினால் நடத்தப் பட்ட வாசகர்கள் மில்லினியம் வாக்கெடுப்பில் " கடந்த 1000 வருடங்களில் தோன்றிய மனிதர்களிலேயே உன்னதமானவர் என்று தேர்ந்தெடுக்கப் பட்டவர் " மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி "

அந்த மஹான் தோன்றிய மண்னில் நாமும் தோன்றியதை எண்ணி பெருமை கொள்வோம்..அவர் பற்றி மென்மேலும் படித்துணர்வோம்.

வாழ்க மஹாத்மா காந்தி...வளர்க அவர்தம் ஒப்பிலா அஹிம்சை தத்துவங்கள்...ஜெய் ஹிந்த்

கி அ அ அனானி

*** 359 ***




Saturday, September 22, 2007

சரத்குமார் = Common sense

நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்(!) சரத்குமார் நேற்று ஒரு பேட்டியில் முதல்வர் கருணாநிதி ராமரை அவதூறு பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் அல்லது ராமரை வழிபடும் பக்தர்கள் இனி திமுக வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உறுதிபடக் கூற வேண்டும் என்று ஒரு சூப்பர் ஷாட் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

மேலும் அவர், "பல கோடி பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டு, பின் அவர்களிடமே தேர்தலின்போது வாக்குக்கு கையேந்துவது சரியல்ல! மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ராமர் குறித்து முதல்வர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களால், அவர் IPC பிரிவு 295A மற்றும் 290 வாயிலாக தண்டனை பெற வாய்ப்புள்ளது. அத்வானியுடன் ராமர் குறித்த விவாதத்திற்குத் தயார் என்று அறைகூவல் விடும் முதல்வர் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்தால் தான், நியாயமான விவாதம் நடைபெற வழி பிறக்கும்! நம் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதில் கவனம் செலுத்துவதை விடுத்து, இது போன்று உள்நோக்கத்துடனான, தேவையற்ற, பெரும்பான்மை இந்து மக்களை வேதனைக்குள்ளாக்கும் கருத்துக்களை பேசி, முதல்வர் தனது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்." என்று சரத் மேலும் கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு மாற்றுப்பாதை அமைக்க முடியுமானால், அது குறித்து ஆராய்வதில் தவறொன்றுமில்லை என்றும், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அளவுகோல்களில், ராமர் சேதுவை உடைத்து அமைக்கும் கடல் பாதை தான் ஏற்றது என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் கருத்துக்களை முன் வைக்க வேண்டியது அரசின் கடமை என்றும் சரத் கூறியுள்ளார்.

சரத் தனது பேட்டியில் பிஜேபியையும் ஒரு வாங்கு வாங்கியுள்ளார்! திட்டம் தொடங்கி 18 மாதங்களுக்குப் பின் அரசியல் ஆதாயத்திற்காக, பிஜேபி இப்பிரச்சினையை கையில் எடுத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்! பிஜேபி விரித்த வலையில் தி.மு.க விழுந்து விட்டது என்றும், திரு.அத்வானி மற்றும் திரு.கருணாநிதி ஆகிய இருவருமே கண்டனத்துக்குரியவர்கள் என்றும் சரத் பொரிந்துள்ளார்.

தமிழர்களின் 150 ஆண்டுக் கனவான சேது சமுத்திரத் திட்டத்தின் நோக்கம் அரசியல்-மத சர்ச்சைகளினால் திசை திருப்பப்படாமல், திட்டம் சுமுகமான முறையில் நிறைவேற்றப்பட்டால், தென் மாவட்டங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழி பிறக்க நல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியாக, அடுத்த மாதம் ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று கணித்த சரத், திமுக அரசு, இலவசத் திட்டங்கள் தவிர்த்து வேறெதையும் தனது சாதனைகளாகக் கூற இயலாத நிலையில் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்!

நன்றி: டெக்கான் குரோனிக்கள்

*** 358 ***

Friday, September 21, 2007

கில்லாடி ரோஹித்+மாவீரன் R.P.சிங் = A scintillating Indian Victory

நேற்று நடந்த இந்திய-தென்னாபிரிக்கா ஒரு நாள் பந்தயத்தில் (அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு) இந்தியா வென்றே ஆக வேண்டிய சூழல் (as usual) ! என்ன, இம்முறை, இவ்வளவு ஓவர்களில் வென்றாக வேண்டும் என்றோ, இத்தனை ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்றோ extra கவலைகள் இல்லை:)

சமீபத்தில், தொடர்ந்து T-20 கிரிக்கெட் ஆட்டங்களை டிவியில் பார்த்து வருவதால், கண்களில் எரிச்சல் இருந்தாலும், எப்போதும் போல் அடியேன் இரவு 9 மணிக்கு டிவி முன்பு (25 வருட வியாதியான, ஒரு வித எதிர்பார்ப்பு மற்றும் டென்ஷனோடு) ஆஜர் ஆனேன்!  டாஸில் வென்ற தோனி,  பேட்டிங் செய்ய முடிவெடுத்தது சற்று ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், ஆடுகளம் (pitch) புதிதாக அமைக்கப்பட்ட ஒன்று,  இந்தியாவுக்குப் பிடிக்காத பச்சை நிறத்தில் (grassy) காணப்பட்டது ;-)  ஆனால், தோனி கூறிய (ரன் இலக்கை துரத்துவதில் உள்ள அழுத்தத்தை சமாளிப்பதை விட ஒரு இலக்கை நிர்ணயிப்பது சாலச் சிறந்தது என்ற) காரணம் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே தோன்றியது. 

சேவாக், கம்பீர் களமிறங்கினர்.  எப்போதும் போல், வேகப்பந்து வீச்சாளர் படை ஒன்றுடன் நம்பிக்கையுடன் களமிறங்கியது தெ.ஆ!   டர்பன் ஸ்டேடியம், ஆரவாரத்திலும், கொண்டாட்டங்களிலும் களை கட்டியிருந்தது.  வர்ணனைக்கு வந்த கவாஸ்கரே சற்று டென்ஷனில் தான் இருந்தார், இந்தியா ஜெயிக்க வேண்டுமே என்று !

நிதானமாக ஆடத் தொடங்கிய இந்தியா 4.4 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியாவுக்கு சனி பிடித்தது! நான்கு பந்துகளில், 3 விக்கெட்டுக்களை (கம்பீர், கார்த்திக், சேவாக்) பறி கொடுத்து, 33-3 என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.  ஆடுகளத்தில் நல்ல ஸ்விங் இருப்பது தெளிவாகப் புலப்பட்டது. ரோஹித் சர்மா (யுவராஜ் ஆட முடியாத காரணத்தால் தான் இவர் அணியில் இருந்தார்) களமிறங்கினார். அவரும் உத்தப்பாவும் ஸ்கோரை 10.3 ஓவர்களில், 61க்கு எடுத்துச் சென்றபோது, உத்தப்பா, அடிக்கப் போய், ஸ்மித் பிடித்த அபார கேட்ச் மூலம் விக்கெட்டை இழந்தார்.  (அப்போது எ.அ.பாலா கடுங்கோபத்தில், உத்தப்பாவை திட்டி விட்டார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்:))

பின்னர் வந்த தோனியும், ரோஹித்தும் மனம் தளராமல் (ஒரு challenging இலக்கை எப்படியாவது நிர்ணயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன்!) ஜோடி சேர்ந்து ஆடி, 9.1 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்தனர். சர்வதேச அனுபவம் இல்லாத ரோஹித், கடினமான ஒரு சூழலில் (33-3) வந்து, பந்து அலைபாயும் ஆடுகளத்தில், மிகச் சிறப்பாக ஆடியதை இங்கே குறிப்பிட வேண்டும்.  ரோஹித்திடம் நல்ல டெம்பர்மெண்ட்டும், திறமையான ஷாட் செலக்க்ஷனும் காணப்பட்டது.  இவர் கடைசிப் பந்தில் அடித்த, வீரமான ஸிக்ஸரால், இந்தியா 150-ஐத் தாண்டி, தெ.ஆவுக்கு 154-ஐ வெற்றி இலக்காக நிர்ணயித்தது!
*****************************************************

பந்து வீச, இந்தியா நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் களமிறங்கியதாகத் தான் எனக்குத் தோன்றியது (இல்லை, பிரமையோ, என்ன இழவோ ?).  RP சிங் தனது முதல் ஓவரில், 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி (கார்த்திக், ஸ்மித் கொடுத்த கேட்சை பிடித்தது, பிரில்லியண்ட்!), அடுத்த ஓவரில், ஸ்ரீசாந்த் டிவிலியர்ஸை LBW அவுட்டாக்கியதில், தெ.ஆ 12-3 !  ஆட்டம் சூடு பிடித்தது, என் விருப்பம் போலவே :) 

ஜஸ்டின் கெம்பும், பவுச்சரும், தட்டுத் தடுமாறி ஸ்கோரை 30க்கு இட்டு வந்தபோது, நமது பேட்டிங் ஹீரோ ரோஹித்தின் அபார முயற்சியால், கெம்ப் ரன் அவுட் ! தொடர்ந்து, RP சிங் போலக்கை (round the wicket பந்து வீசி) க்ளீன் போல்ட் செய்து பெவிலியனுக்கு அனுப்பியதில், 31-5 ( 5.5 ஓவர்கள்).  ஒரே குறை, ஸ்ரீசாந்த்தும், RP சிங்கும் பல wide பந்துகளை வீசியது தான்!  இப்போது, மிக லேசாக, இந்திய அணி ரத்த வாடையை உணர்ந்தது !  ஆனால் அந்த வாடையை என் மூக்கு உணர மறுத்தது :) 

அதன் பின், பவுச்சர், மார்க்கல் இடையே ஒரு நிதானமான பார்ட்னர்ஷிப் மலர்ந்து, ஸ்கோர் நூறை எட்டியது (16.4 ஓவர்கள்).  ஆனால், தேவையான ரன் ரேட் (16.2 ரன்களுக்கு) எகிறியிருந்தது.  நடு ஓவர்களின் போது, ரன் ரேட் எகிறியதற்கு முக்கியக் காரணம் இர்பான் பதானின் திறமையான பந்து வீச்சு (4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தார்!).  ஜோகிந்தரும் நன்றாகவே பந்து வீசினார்.  அந்த நிலையில், தெ.ஆ ஒழுங்காக, அரை இறுதிச்சுற்றுத் தகுதிக்குத் தேவையான இலக்கை (126 ரன்கள்) முன் வைத்து ஆடியிருக்க வேண்டும்! 

ஆனால் நம் அணியினரோ, தெ.ஆ வை மொத்தமாக வூட்டுக்கு அனுப்புவதில் குறியாக இருந்தனர் போலும்!  விதி வேறு சதி செய்தது! ஸ்ரீசாந்த்தின் வெளி செல்லும் பந்தை, ஸ்டம்ப்புக்கு இழுத்து, பவுச்சர் போல்ட்!!!  100-6.  இப்போது டிவியில் பார்த்துக் கொண்டிருந்தே எனக்கே தெளிவாக ரத்த வாடை அடித்தது (நான் அதிகமாக national geography, Animal planet சேனல்கள் பார்ப்பதால் இருக்குமோ ?) !

நமது டர்பனேட்டர் ஹர்பஜன், தனது முழுத்திறமையை காட்டி பந்து வீசிக் கொண்டிருந்தார்! 103-இல், பிலாண்டர் ஸ்டம்ப் அவுட் ஆனதில், 103-7.  RP சிங்கின் (19வது) ஓவரில், தெ.ஆ வின் கடைசி நம்பிக்கையான மார்க்கலின் ஸ்டம்ப் சிதற அடிக்கப்பட்டதில், 109-8.   களத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தெ.ஆ அணியினர் பேயறைந்தது போல் காணப்பட்டனர்.  தெ.ஆ ரசிகர்கள், நடப்பது கனவா நனவா என்ற நம்பிக்கை இல்லாமல் பேச்சு மூச்சு இன்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.   ஸ்டேடியத்தில் இருந்த டர்பன் வாழ் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆரவாரித்த வண்ணம் இருந்தனர்.

இறுதியாக, (இதுவரை நடந்த எல்லா ஆட்டங்களிலும் வென்ற) தெ.ஆ 20 ஓவர்களில் 116-9 என்ற நிலையில், அரை இறுதிச் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் தோற்றுப் போனது சோகமே!  இந்தியா நேற்று டர்பனில் அடித்த கூத்தில், 'பின்புற வாசல்' வழியாக நியூஜிலாந்து அரை இறுதிச்சுற்றில் நுழைந்து விட்டது :)   தெ.ஆ வை கலகலக்க வைத்து, மண்ணைக் கவ்வ வைத்ததில், RP சிங்குக்கு பெரும்பங்கு உண்டு (4-0-13-4).   இளம் இந்தியா வாழ்க, வளர்க !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 357 ***

Monday, September 17, 2007

திருந்துவோமா நாம் ? - மீண்டும் கி அ அ அனானி

நேற்றே கி அ அ அனானியிடம் இருந்து கீழ்கண்ட மேட்டர் மெயிலில் வந்திருந்தது.நேற்று முழுவதும் மெயில் பார்க்காததால் , இதையும் பார்க்கவில்லை. ஆனால் " இது பற்றி மேலும் எனது கருத்தை உங்கள் பதிவில் வெளியிட விருப்பம் இல்லை போல் தெரிகிறது,பரவாயில்லை அதனால் இதை முகமூடி பதிவிலும் பின்னூட்டமாக போட்டு விட்டேன்" என கடுப்பாகி இன்று மெயில் போட்டிருந்தார். :-)

ஏற்கனவே கி அ அ அனானியின் கொ ப செ ஆக ஆக்கப்பட்டு விட்ட படியாலும், கருத்து சுதந்திரத்தின் மேல் உள்ள தீவிர நம்பிக்கையாலும் கி அ அ அனானி அனுப்பிய மேட்டர் பதிவாக கீழே..:))) என்சாய்..:)))

எ.அ.பாலா

*****************************************************************************

தொடரும் தோழரின் "கவனிப்பு"

தோழர் "வளர்மதி" என்பவர் அருமையாக சில பதிவுகள் போட்டிருக்கிறார்... அதன் சாராம்சம் கீழே...

"போலி செய்தல் அப்படீங்குற பேருல..கருத்துக்களை, முழு புரிதலும் இல்லாமல் காப்பியடித்து தனது போல் கையாளுவதை கண்டித்து எழுதியிருப்பார் போல் இருக்கிறது...அது சுகுணா திவாகர் என்ற பதிவரை சுட்டிச் சொல்வது போல் பட்டிருக்கிறது போல " சரி...இதுல ஒனக்கென்ன அங்கலாய்ப்பு என்கிறீர்களா...இல்லீங்க..யாரு போலி பண்ணினா நமக்கென்ன யாரு சுட்டிக்காட்டினா நமக்கென்ன ?ஏதோ நாமளுண்டு நம்ம பொழப்புண்டுன்னு சும்மாதாங்க இருந்தோம்.
" மேலும் வளர்மதி , சுகுனா திவாகர் மற்றும் வரவணை ரெண்டு பேரையும் படிங்கப்பா ..படிக்காம மேம் போக்கா பேசாதீங்க " என்று ஸ்கூல் மாஸ்டர் ரேஞ்சுக்கு அதட்டியிருப்பார் போல... இதுல உனக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா...எனக்கென்னாங்க பிரச்சினை இருக்கப் போகுது..சொம்மாதானுங்க கெடந்தோம்.

" இதுக்கு வரவணை தாஸ் காப்பிடலை காரல் மார்க்ஸ் தவிர யாரும் படிக்கவில்லை... எங்கல்ஸே ப்ரூப் ரீடிங் போதுதான் படிச்சாரு" எங்கிற ரேஞ்சுக்கு பதிவு போட்டு சின்னப்பையன் கக்கூஸ் போய்க்கினே பேப்பர் படிக்கிற படமெல்லாம் போட்டு அல்லாரும் நல்லா வாசிங்க... வாசிங்க அப்படீன்னு பதிவு போட்டாருங்க....இதுல உனக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா... எனக்கென்னாங்க பிரச்சினை இருக்கப் போகுது..அல்லாரும் அல்லா எடத்திலேயும் வாசிக்கிறது நல்லதுதானுங்களே.

" இதுல கடுப்பாயி வளர்மதி சொன்னாரு...சரி-தப்புன்னெல்லாம் பார்க்காம ஒரு பிரச்சினை அப்ப்டீன்னு வரும் போது இவனுங்க ரண்டு பேரும் சாதிப் புத்தியை காட்டிட்டாங்க அப்படீன்னு ரண்டு பேர் சாதி பேரெல்லாம் போட்டு "ஜாதிப் புத்தி" அப்படீன்னு எபெக்டுக்கு வடமொழி"ஜ" எல்லாம் யூஸ் பண்ணி அப்புறம் ஊருகாயாக பாப்பாரப் புத்தி, பாப்பார வேலை என்ரெல்லாம் போட்டு ஒரு பதிவு போட்டாருங்க ..இதுல உனக்கு என்னா பிரச்சினைஅப்படீங்குறீங்களா..இல்லை சாமி இதுலையும் எனக்கு ஒரு பிரச்சினையில்லை...பொத்திக்கினு தான் இருந்தோம்...இதுல காமடி இன்னான்னா இந்தப் பதிவுல இவரு சுகுணா. வரவனையை விட பாப்பானுங்களைதான் ஜாஸ்தி திட்டியிருக்கார்..ஆனா அல்லாரும் மெளனம் காத்துக்கிட்டுதான் இருந்தாங்க..ஆரும் வம்பு வலிக்கலை...

இனிமே தான் மெயின் ஸ்டோரி

" சுகுணா திவாகர்..பிரேக்கிங் பாயிண்ட்டை அடைஞ்சுட்டார் போல( இதுவும் வலையுலகில ஒருத்தர் சொன்னதுதான்)..என்னை சாதியத்துடன் தொடர்பு படுத்தி எழுதிட்டாங்க...அதுனால நான் ஒரு வெறுமயை உணர்கிறேன் அப்படீன்னு சொல்லி...வலர்மதியை பர்சனலா நாலு திட்டு திட்டி இனிமே பதிவெழுதப் போறதில்லை அப்படீன்னு " வேதனயுடன் விலகுகிரேன் " அப்படீன்னு ஒரு செப்டம்பர் பிரகடனம் பண்னினாருங்க...சரி இதுல உனக்கென்ன பிரச்சினை அப்படீங்குறீங்களா... இருக்குங்களே..முன்னால நாம போட்ட ஒரு பதிவுல கருத்தை எதிர் கொள்வதுடன் சேர்த்து எபெக்டுக்காக பதிவை வெளியிட்டவரின் ஜாதியை போட்டு புரட்னாருங்கோ இதே சுகுணா திவாகர்...அதுக்கும் இதுக்கும் என்னாங்க வித்தியாசம்...இப்பம் உங்களை சாதி சொல்லி திட்டுனதுல இம்புட்டு பீலிங்ஸாகி விட்டீர்களே அப்படீன்னு நாம கேட்டமுங்க போன பதிவுல்..
இன்னும் முகமூடி மாதிரி சில பேர் வேற வேற மாதிரி பதிவு போட்டாருங்கோ அவங்கவங்க ரேஞ்சுல.

இனிமே தான் கிளைமாக்ஸு

வளர்மதி "பார்ப்பனக் கூத்து, எச்சரிக்கை " அப்படீன்னு ஒரு டகால்பாஜி காட்டியிருக்காருங்கோ...அவரு இவங்களுக்கு மண்டையில ஒரைக்கணுமுன்னு ஜாதி பேர் சொல்லி திட்டினாராம்..அதுவும் சாதிய மனோபாவம் என்று சொல்லும்போது, செறிவான புரிதல்களோடேயே சொல்கிறேன் " அப்படீன்னு தன்னிலை விளக்கம் வேற."... சவாசு அப்படிப் போடு சவாசு

" அப்புறம் இதை சற்று 'காட்டமாக' ( அதாவது அடுத்தவன் சாதியை பற்றி திட்டி "ஜாதிப் புத்தி" என அறிவார்த்தமா எழுதிக் கொண்டிருக்கும்போதே,) சில பார்ப்பன விஷமிகள், "ஊர் ரெண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்று, இடையில் புகுந்து விளையாடத் தொடங்கிவிட்டதைக் கவனிக்க நேர்ந்து, அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணம் கொண்டு. அதனாலேயே, இதை இத்தோடு முடித்துக் கொள்ள விழைகிறாறாம்." அதாவது ரண்டே ரண்டு பேரை மட்டும் ஜாதியச் சொல்லி திட்டுனதோடு நிப்பாட்டிக்கிறாராம் " ஹொய் ஹொய்யா .. ஹய்யா...ஹொய் ஹொய்யா..திராவிடமும் மார்க்ஸியமும் இவர் தயவால் தமிழ் வலையுலகில் புனர் ஜென்மம் எடுத்து விட்டது...சரி ..இதுல உனக்கென்ன பிரச்சினை அப்படீங்குறீங்களா..அட..எனக்கென்னங்க பிரச்சினை இருக்கப் போகுது..நல்லா நடக்கட்டும்.

இனிமேதான் சூப்பர் ஷாட்டு

""இதற்கு மேலும் விஷமங்கள் தொடர்ந்தால், மற்ற தோழர்கள் 'கவனித்துக்' கொள்வார்கள் என்று நம்புகிறேன்.""" அப்படீன்னு கட்சித்தலைவர் ரேஞ்சுக்கு போய் கோடி காட்டியிருக்கிறார் இந்த கேடி(கேடிக்கு அர்த்தம் இவர் பதிவிலேயே சொல்லியிருக்காருங்க)..இதுல உனக்கென்ன பிரச்சினை அப்படீங்குரீங்களா...என்னங்கண்ணா இப்படி கேட்டுட்டீங்க....அன்ணா....அண்ணா ...என்னைய காப்பாத்துங்கண்ணா ..பயம்மா இருக்குண்ணா...வளர்மதி "தோழர்கள்" மூலமா என் தமிழ் வலையுலகுக்கான இலக்கிய சேவையை முற்றுப் பெறாமலேயே முடிவுக்கு கொண்டு வந்து விடுவாரோன்னு அஞ்சி நடுங்குறேனுங்கண்ணா....காப்பாத்துங்கண்ணா....இப்போதைக்கு பயத்துல தலை மறைவா இருக்கேனுங்கண்ணா :))

இந்த மாதிரி அரைகூவலுக்கு ஒரு பதில் மரியாதை

விவாதம் பண்ண முடியலைனா, நண்பர்களாக கருதப் பட்டவர்களையே கீழ்த்தரமாக சாதியை சொல்லி திட்டுரதும்..அதுக்கு புத்தகத்தை பொரட்டி பொரட்டி படிச்சு செஞ்சது சரிதான் அப்படீன்னு சுத்திவளச்சு வியாக்கியானம் எழுதுர ஆளு நானில்லை...அதே மாதிரி தப்புன்னு தோணிச்சுன்னா தைரியமா சொல்லுவோம்...இந்த "கவனிச்சிருவோம், கட்சி கட்டிருவோம் " டகால்பாஜியெல்லாம் வேற எங்கனாது போய் காட்டுங்க....அது சரி நீங்களெல்லாம் ஒரு கொள்கைப் பிடிப்போடு , ஒரு இயக்கத்துல இருக்கீங்களாக்கும்..போய் சொல்லுங்க...நான் ரண்டு பேரை "ஜாதிப் புத்தி" ன்னு சொல்லி திட்டுனேன் அப்படீன்னு...மெச்சி பாராட்டுவாங்க.." இதுல நீங்க கேக்குறீங்க அடுத்தவனை பார்த்து...பெரியார் உங்களுக்கு ஊறுகாயா" அப்படீன்னு..அவரு உங்களுக்கு இன்னாங்கோ...

சரி... இதெல்லாம் ஏன் எழுதுர...அல்லது ஏன் மூக்க நுழைக்கிற அப்படீன்னு கேக்குரீங்களா..( ரெண்டு பேர் கேட்டாலும் கேப்பாங்க).கத்திரிக்காயை கடையில போட்டு நாலு பேருக்கு தெரியணுமுன்னு தெரட்டி ..தொரட்டியிலெல்லாம் போட்டுதான விக்குரீங்க...சொந்த விஷயமுன்னா ஊட்டுக்குள்ள வச்சுக்குங்க...இதை வலையிலேயே ஒங்க நண்பர்கள், தோழர்கள் னு சொல்றவங்களே நெறைய பேர் பதிவும் போட்டு பின்னூட்டத்திலையும் சொல்லிட்டாங்க.... ஆனா இதெல்லாம் கேட்டுருவீங்களா நீங்க...அடுத்தவன் சொல்ற நல்ல விஷயத்தை காது கொடுத்து கேட்டாதான் எப்பமோ முன்னேறியிருப்போமே ...தூத்தேரிக்கி...

கி.அ.அ.அனானி
*********************************************************************

***356***

Saturday, September 15, 2007

355. சாக்கடைக் கொசுக்களா நாம்? --- கேட்கிறார் கி.அ.அ.அனானி!

பதிவின் தலைப்பை, சன் டிவியில் வரும் 'குங்குமம்' விளம்பரம் ஸ்டைலில், வாசிக்கவும் :)
கடந்த 3 மாதங்களாக, தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் அதிகம் வரவில்லை. வழமையான காரணம் --- வேலைப்பளு ! ஏதோ 2-3 பதிவுகள் போட்டிருப்பேன்.

சரி, இப்ப பதிவின் மேட்டருக்கு! நண்பர் கி.அ.அ.அனானியும் (கிராமத்து அரட்டை அரசியல் அனானி --- இவர் ஏற்கனவே சிலபல பதிவுகள் எழுதி எனக்கு அனுப்பி, அவற்றை என் வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன் --- இந்த விளக்கம் கி.அ.அ.அ வை மறந்து விட்டவருக்கு அல்லது அறிமுகம் இல்லாதவருக்கு ;-)) பிஸியாக இருந்திருப்பார் போல இருக்கு! திடீரென்று இன்று மெயிலில் ஒரு மேட்டரை அனுப்பி, பதிப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்! மேட்டரைப் படித்தால், தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை :)

தமிழ்மணம் பக்கம் சென்று சில பதிவுகளை வாசித்தபின் விஷயம் ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரி தோன்றியது! புரியாவிட்டாலும் பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை தானே!

கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், கி.அ.அ.அ வின் கொ.ப.செ ஆக ஏற்கனவே ஆகி விட்டதாலும் (அல்லது ஆக்கப்பட்டு விட்டதாலும் :)) கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் !

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் (இதற்கு வினை-மறுவினை என்பது, T-20 வகை கிரிக்கெட் போன்றது, எனக்கு 50 ஓவர் ஆட்டம் தான் ஓரளவு விளையாட வரும், அதனால் தான் கி.அ.அ.அ வையே விளையாட அழைக்கிறேன் :)) கி.அ.அ.அ மெயில் மேட்டர் பதிவாக கீழே !

எ.அ.பாலா
***********************
அன்புள்ள சுகுணா திவாகர்,

உங்களது " வேதனையோடு விலகுகிறேன் " என்ற பதிவு பார்த்து நெகிழ்ந்து போய் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உங்களது சாதி மறுப்பு என்பது கேள்விக்கிடமில்லாததுதன்..இதை உங்களை கருத்துத் தளத்தில் எதிர்பவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள்..பின்னூட்டம் வாயிலாகவாவது ...


அப்படிப்பட்ட உங்களை வளர்மதி என்பவர் " ஜாதி புத்தி" என்பதாக சொல்லி திட்டி விட்டார்...நல்ல வேளையோ அல்லது கெட்ட வேளையோ அவர் பார்ப்பனரல்லாது போய் விட்டார் . ( அவர் பார்ப்பனரல்லர் என்பதையும் உங்களது பதிவின் மூலமாக....சொல்ல மாட்டேன்...சொல்லமாட்டேன் என்று சொல்லி ஒரு 6 நபர்களின் ஜாதிகளை சொல்லிக் காட்டினீர்களே...அதிலிருந்து தெரிந்து கொண்டேன்)...அவர் பார்ப்பனராக இருந்திருந்தால்..ஆ..சாதித் திமிரில் சொல்கிறான் என்று ஒரு கணமும் யோசிக்காமல் உடனே சொல்லலாம்...ஆனால் அது முடியாததாகி விட்டது...அதனால் வேதனையோடு விலகுகிறீர்கள்..அதற்கும் எதற்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை...இருந்தாலும்...நல்லதே நடக்கட்டும் ..என்று மட்டும் பொதுவாக கூறிக் கொள்கிறேன்.

பரவாயில்லை...நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்...மனிதன் தவறு செய்வது என்பது இயற்கை...அதைத் திருத்திக் கொள்வதும் இயற்கைதான்...... முன்னம் தாங்கள் சிலரை கருத்து தளத்தில் எதிற்காமல் வாய் கூசாமல் சாதியை சம்பந்தப் படுத்தி எழுதி எள்ளிய சில உதாரணங்கள் கீழே உங்கள் பார்வைக்கு....

"பாலபாரதியின் இயலாமையும் பாலாவின் பார்ப்பன ஜல்லியும்"

""'அப்பாவிப் பார்ப்பனர்க'ளின் மனதைப் புண்படுத்துகிறது என்று நினைத்தோ என்னவோ 'என்றும் அன்புடன் பாலா' என்ற நண்பர் தன்னுடைய பதிவில் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்."""

""ஆனால் அப்படி நடந்தாலும் 'என்றும் வம்புடன்' பாலாவோ அல்லது அவரது ஒண்ணுவிட்ட, ரெண்டுவிடாத தூரத்துச் சொந்தங்களோ அனானியாகவோ அநாமதேயங்களாகவோ வந்துகேள்வி கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். நாம் என்ன செய்யவேண்டும்? 'போடா பாப்பார ஜாட்டான்' என்று போகவேண்டியதுதான்.""


இப்படியெல்லாம் முன்னே பின்னே பார்த்திராதவரை கூட வாய்க்கு வாய் அவரது ஜாதியை குறிப்பிட்டு..குறிப்பிட்டு, நமக்கு இனிக்க இனிக்க வசை பாடினோமே..அப்போது மற்ற அல்லக்கைகளும் சுகமாக சொரிந்து விடும் போது நன்றாக இருந்ததே என்பதெல்லாம் மறந்திருந்தால் சற்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள்...

அதுவும் அந்தப் பதிவு என்னுடையது..ஆனால் போட்டதற்கு சாதி சொல்லி திட்டு எ.அ.பாலாவிற்கு:)))

வாழ்க எ அ பாலா !

அப்போது அவர் """"என்மேலேயே தனிப்படட் காழ்ப்புணர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொஞ்சமும் அறமும் நேர்மையுமில்லாமல் ஒருவன் சாதியரீதியாக அடையாளப்படுத்திவிட்டபிறகு வெறுமனே சூன்யத்தையே உணர்கிறேன்."""" என்று பதிவெழுதவில்லைதான்

ஆனாலும் மனது கஷ்டப்பட சாத்தியக் கூறுகள் உண்டில்லையா...இது தெரிந்த ஒரு உதாரணம்...இது போல் எத்தனை தளங்களில் எத்தனை பேருக்கு எத்தனை சாதீயத் திட்டுகளை தந்தோமோ...அதனால் போகிற போக்கில் இந்த மாதிரி முன்னிட்ட தீக்களுக்கு ஒரு " பொது மன்னிப்பு " கேட்டு விடுங்கள்.

இப்படி தெரியாத ஒருவரை அந்த சாதியை பிடிக்காது என்ற காரணத்துக்காக " சாதியுடன் சம்பந்தப் படுத்தி " எழுதினீர்களே உங்களைப் பற்றி நங்கு அறிமுகமுள்ள..நேருக்கு நேர் சந்தித்துமுள்ள வளர்மதி குறிப்பிட்டுள்ளது சரியாகத்தானே இருக்கும் என்று சிறுபிள்ளைத்தனமான தர்க்கம் செய்யப் போவதில்லை.. ஏனென்றால் நீங்கள் சாதீயத்திற்கும் (atleast பிராமணர்களுக்கும்) எதிரானவர் என்பதை உங்களுடைய எழுத்து மூலமாக நன்கு அறிந்தே உள்ளேன்

இங்கு நான் பார்ப்பனரை பார்க்கவில்லை..பார்ப்பனீயத்தைதான் பார்த்தேன் ..பேசினேன் என்று ஜல்லியடித்தால்


1. ""நானும் சுகுணா மற்றும் வரவனையின் பிள்ளைமாரீயத்தை தான் பேசினேன் ""என்று காம்ரேட்"வளர்மதி" எதிர் ஜல்லியடிக்கக் கூடும்.+

2."""""'பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் நிரம்பியுள்ள சூழலில்.... """ என்று எழுதும் உங்களுக்கு பார்ப்பனீயம் அல்ல பார்ப்பனர்கள்தான் எதிரிகளாக தெரிகிறார்கள் என்று நான் ஜல்லியடிக்கலாம்.

மற்றபடி உங்களது பின் நவீனுத்துவம்...கவிதை ..பற்றியெல்லாம் நமக்கு எதுவும் தெரியாது...ஆனால் நன்றாக இருக்கும் என சிலர் வலையில் பேசிக் கொண்டிருப்பதை படித்ததுண்டு.

"மாறாதது என்பது எதுவுமில்லை...மாற்றம் என்ற சொல் தவிர அனைத்தும் மாறும்" என்பது போன்ற தத்துவங்களெல்லாம் உங்களுக்கு அத்துப்படி.நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. மற்றும்

""தாக்கினால் புழுக்கள் கூட தரை விட்டுத் துள்ளும்
பருந்து தூக்கிடும் குஞ்சு காக்கத் துடித் தெழும் கோழி
மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட எதிர்த்து நிற்கும்
சாக்கடைக் கொசுக்களா நாம்...காலத்தின் சக்கரங்கள் ""


இந்தக் கவிதை கேட்ட மாதிரி இருக்கிறதா ?ஆமாம் அவருடையதேதான்...ஏதோ இந்த இடத்தில் இந்த இரண்டு விஷயங்களையும் குறிப்பிட வேண்டும் என தோன்றியது.


வாழ்வில் நீங்கள் கொண்ட பணி சிறக்க வாழ்த்தி விடை கொடுக்கும்

கி.அ.அ.அனானி
*****************************

*** 355 ***

Thursday, September 06, 2007

அறிவிலி டிராவிட்+மாவீரன் உத்தப்பா = A remarkable Indian victory

நேற்று  நடந்த இந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் போட்டி பற்றி தான் சொல்கிறேன்!  ஒரு நாள் தொடர் 3-2 என்று இருந்த நிலையில், இந்தியா நேற்று வென்றால் தான், லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டி, தொடரை நிர்ணயம் செய்யும் விதத்தில், விறுவிறுப்பாக அமையும் என்பதால், இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்களை இழந்து (136-5, 30.2 ஓவர்கள்) தடுமாறிக் கொண்டிருந்தது. எப்போதும் போல், நம் பந்து வீச்சாளர்கள் வள்ளல்களாக மாறியதில், ரைட்டும் ஷாவும் ஜோடி சேர்ந்து 14 ஓவர்களில் 107 ரன்கள் குவித்தனர்.  ரைட் விக்கெட்டை இழந்தபோது (243-6, 44.2 ஓவர்கள்), களத்தில் நுழைந்த மாஸ்கரன்ஹாஸும் (Mascarenhas) ஷாவும் 49-வது ஓவரின் முடிவில் ஸ்கோரை 286-க்கு இட்டுச் சென்றனர். அப்போது தான் நமது கேப்டன் டிராவிட் ஒரு முட்டாள்தனமான செயலைச் செய்தார்.  ரமேஷ் பவாருக்கு ஒரு ஒவர் மிச்சமிருந்த நிலையில், பகுதி நேர பந்து வீச்சாளரான யுவராஜை இறுதி ஓவரை போட அழைத்தார் . முதல் பந்தில் ரன் இல்லை.  திடீரென்று  Mascarenhas "Massacre"nhas ஆக உருமாறி அடுத்த 5 பந்துகளில் தொடர்ந்து ஸிக்ஸர்கள் அடித்து முப்பது ரன்கள் எடுத்ததில், இங்கிலாந்தின் ஸ்கோர் 316ஐ எட்டியது.

317 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா, நமது 'வயதான' தொடக்க ஆட்டக்காரர்களின் (சச்சின், கங்குலி) அபார ஆட்டத்தால் 22.2 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்த நிலையில், கங்குலி விக்கெட்டை இழந்தார். இந்த இடத்தில், தன்னம்பிக்கை இல்லாத டிராவிட் தான் களமிறங்காமல், கம்பீரை அனுப்பி சொதப்பினார். அவரும் மட்டை மேல் மட்டை போட்டதில், அடுத்த 4 ஓவர்களில் இந்தியா 6 ரன்கள் எடுத்தது!   நழுவிப் போகின்ற டெம்போவை நிலைநிறுத்த சச்சின் மட்டையை வீசப் பார்த்ததில், காலிங்வுட் அபாரமான கேட்ச் ஒன்றைப் பிடித்து, சச்சினை பெவிலியனுக்கு அனுப்பி இங்கிலாந்து அணியினரின் வயிற்றில் பாலை வார்த்தார்!

அதன் பின் அப்படி இப்படி என்று ரன்கள் வந்தாலும், இந்தியா யுவராஜ், டிராவிட், கம்பீர் ஆகியோரை இழந்தது. தேவையான ரன் ரேட்டும் கூடிக்கொண்டு போனதில், கடைசி 9.4 ஓவர்களில் இந்தியா 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில், 21 வயதான நமது ஹீரோ ராபின் உத்தப்பா (தொடக்க ஆட்டக்காரரான இவர் ஏழாவது ஆட்டக்காரராக) களமிறங்கினார். இதற்கு முந்தைய (இங்கிலாந்துடனான) 5 ஒரு நாள் போட்டிகளில் இவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!  எனக்கு ஏனோ நேஷனல் ஜியாகரபி சேனலில் பார்த்த, 'சாகப்போகிறோம் என்று தெரிந்த' ஒற்றை காட்டெருமை ஐந்தாறு சிங்கங்களுடன் போராடி உயிரை விடும் காட்சி நினைவுக்கு வந்தது!

தோனியும், உத்தப்பாவும் நம்பிக்கை இழக்காமல் விளையாடினாலும், 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இந்திய வெற்றிக்கு 42 ரன்கள் தேவையாக இருந்தது. ஜோன்ஸ் போட்ட 47வது ஓவரை விளாசியதில் 15 ரன்கள் கிடைத்தன.  இந்திய ரசிகர்களின் டென்ஷன் எகிறிக் கொண்டிருந்தது! 3 ஓவர்களில் 27 ரன்கள் தேவை. 23 ரன்கள் தேவை என்ற நிலையில், பிராட் பந்து வீச்சில் தோனி க்ளீன் போல்ட்!!! 

ரன் ரேட் கூடி, 2 ஓவர்களில் (12 பந்துகளில்) 23 எடுத்தால் வெற்றி!  மீண்டும் ஜோன்ஸை உத்தப்பா விளாசியதில் (பந்து மட்டையின் ஓரத்தில் பட்டு விக்கெட்கீப்பரை தாண்டிச் சென்றதில், இரண்டு பவுண்டரிகள் கிட்டியது:-)) 49வது ஓவரில் 13 ரன்கள்!  கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை.  முதல் பந்தில் 2 ரன்கள், அடுத்த பந்தில் ஜகீர் கான் ரன் அவுட்! இப்போது, 4 பந்துகளில் 8 ரன்கள் தேவை.  உத்தப்பா அசரவில்லை!  பதட்டமே இல்லாமல், உத்தப்பா முன்னோக்கி நடந்து சென்று பிராடின் மூன்றாவது பந்தை அழகாக fine leg திசையில் தூக்கி அடித்ததில் வெற்றி இலக்கு நான்காகக் (3 பந்துகளில்) குறைந்தது! ஓவரின் நான்காவது பந்தை mid-off திசையில் கம்பீரமாக drive செய்தார் உத்தப்பா, டைவ் செய்த ஃபீல்டரின் கையில் சிக்காமால், பந்து பவுண்டரியை அடைய, A REMARKABLE INDIAN VICTORY :-) 

உத்தப்பா தான் நேஷனல் ஜியாகரபி சேனலில் வரும் (சிங்கங்களிடம் மாட்டிய) காட்டெருமை அல்ல, அந்த சிங்கங்களுக்கெல்லாம் 'தல' என்பதை எனக்கு உணர்த்தியது போல் தோன்றியது:-))  வென்றதில் யுவராஜுக்கு அளவில்லா மகிழ்ச்சி, கிரவுண்டுக்குள் ஓடி வந்து உத்தப்பாவை கட்டி பிடித்து ஆனந்தக் கூத்தாடினார் (பின்ன என்னவாம், கடைசி ஓவரில் 30 ரன்கள் தாரை வார்த்ததற்கு, தோற்றிருந்தால் அவரை மற்றவர் டின் கட்டியிருப்பார்கள் அல்லவா!).  லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா வென்றாலும், தோற்றாலும் எனக்குக் கவலையில்லை! (சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், ஜெயிக்கலேன்னா, அடுத்து ஒரு பதிவு போட்டு இந்திய அணியை ஒரு வாங்கு வாங்கிடுவோமில்ல;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 354 ***

Tuesday, September 04, 2007

353. பகல்பூரின் கற்கால மனிதர்கள்

சமீபத்தில், ஒரு வன்முறை கூட்டத்தின் பிடியில் சிக்கிய ஒரு திருடன் மீது நடந்தேறிய கொடூர வன்முறை பற்றிய செய்தியை வாசித்திருப்பீர்கள், சம்பவம் குறித்த காட்சிகளை டிவியில் பார்த்திருப்பீர்கள். Instant Justice என்ற வகையில் வழங்கப்பட்ட அந்த கொடூர அநீதிக்கு காவலரும் துணை போன கொடுமையைப் பார்த்தபோது, சூப்பர் பவர் என்ற தகுதியை நோக்கி நம் நாடு முன்னேறி கொண்டிருந்தாலும், மனோபாவத்தில் கற்காலத்தை நோக்கி பயணிப்பதாகவே தோன்றியது!

ஔரங்கசீப் என்ற இளைஞர், பகல்பூரில் ஓர் ஆலயத்தின் அருகே, ஒரு பெண்மணியின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியபோது பிடிபட்டதாகக் கூறி, ஒரு வன்முறைக் கூட்டம் அவரது கைகளை பின்புறம் கட்டி, அவரை நையப்புடைத்தது. அவரது மார்பிலும், வயிற்றிலும், முகத்திலும், முதுகிலும் மீண்டும் மீண்டும் எட்டி உதைத்து சித்திரவதை செய்ததை (CNN-IBN, NDTV) டிவியில் பார்த்தபோது, நிஜமாகவே உள்ளம் கலங்கி விட்டது. என்ன மாதிரி Mob Mentality இது!

யாரோ அழைத்து, அங்கு வந்த இரு போலீஸார், ஔரங்கசீபை அந்த வன்முறை கும்பலின் பிடியிலிருந்து மீட்பதை விடுத்து, தங்கள் பங்குக்கு, அவரது கைகளை ஒரு இருசக்கர வாகனத்தின் பின்புறம் கட்டி, வாகனத்தில் வலம் வந்தது கொடூரத்தின் உச்சம்! அங்கு நடந்த வன்முறையை ஒருவர் கூட தடுக்க முன்வராததோடு, பலரும் கை தட்டி ஆரவாரத்தோடு அதை ரசித்ததை என்னவென்று சொல்ல!

இக்காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த CNN-IBN மற்றும் NDTV தொலைக்காட்சியினர் கூட, போலீஸின் இந்த செயலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மீடியாக்காரர் ஒருவருக்கு ஒரு சின்ன பாதிப்பு என்றால், இவர்கள் என்ன குதி குதிப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்! நிச்சயம் இவர்களால் அன்று உயர் போலீஸ் அதிகாரிகளை வன்முறை நடந்த இடத்திற்கு வரவழைத்திருக்க முடியும். ஏதோ படப்பிடிப்பு போல, கட்டற்ற வன்முறை அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அந்த பரிதாபத்துக்குரிய இளைஞர், உடல் முழுதும் ரத்த காயங்களோடு நினைவிழந்து போகும் வரை, வன்முறை தொடர்ந்தது! அவ்விளைஞர் மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக மறுநாள் செய்தி வந்தது. பொதுமக்களின் ரத்த வேட்கைக்கும், பீகார் காவல் துறையில் பரவி விட்ட அழுகலுக்கும் சாட்சியாக இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது!

1980-இல் பகல்பூரில் போலீஸார் 31 கைதிகளின் கண்களில் திராவகத்தை ஊற்றிக் குருடாக்கிய பயங்கர நிகழ்வும், 1989-இல் அங்கு நடந்த மதக்கலவரத்தில் கிட்டத்தட்ட 1000 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது! அதாவது, 27 வருடங்களில் பகல்பூரின் கற்காலத்தை ஒட்டிய மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை! சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே, சட்டத்தை உடைக்கும்போது, நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது :-(

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 353 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails